Last Updated : 20 Jan, 2022 07:31 PM

1  

Published : 20 Jan 2022 07:31 PM
Last Updated : 20 Jan 2022 07:31 PM

கூட்டுப் பண்ணையம் மூலம் பயிர் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்: துணைவேந்தர் இராம.கதிரேசன் பேச்சு

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தில் வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல் செயல் விளக்கப் பண்ணையை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

கடலூர்: கூட்டுப் பண்ணையம் மூலம் பயிர் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று பின்னலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் தெரிவித்தார்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தில் வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல் செயல் விளக்கப் பண்ணை தொடக்க விழா இன்று (ஜன.20) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வீரநாராயண உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் இராம.கதிரேசன் கலந்துகொண்டு நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல்வெளி செயல் விளக்கப் பண்ணையைத் திறந்து வைத்துப் புதிய வேளாண் சுவரொட்டிகளை வெளியிட்டார்.

பின்னர் துணைவேந்தர் இராம.கதிரேசன் பேசுகையில், ''விவசாயிகள் தற்போது இயற்கை வேளாண் முறையில் பயிரிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது வரவேற்கதக்கது. நெல் வயல்களில் விவசாயிகள் கூட்டுப் பண்ணையம் அமைத்து வேளாண்மை செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். கூட்டுப் பண்ணை என்றால் நெல் வயலில் கோழிப் பண்ணை, குட்டையில் மீன் வளர்ப்பதாகும். இதனால் விவசாயத்திற்கு உரம், பூச்சி மருந்துகள் தேவையில்லை. பயிர்கள் நன்கு செழித்து வளரும்.

பயிர்களில் பூச்சி மற்றும் களை இருக்காது. கூட்டுப் பண்ணையம் அமைத்து விவசாயிகள் பயிர் செய்ய முன்வர வேண்டும். இதற்கான அனைத்துப் பணிகளையும் நானே முன்னின்று செய்து தருகிறேன். இதில் முன்னோடியாகச் செயல்படும் விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். கூட்டுப் பண்ணையம் முறையில் விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்தால் அதிக செலவு இல்லாமல் இயற்கை வேளாண் முறையில் மகசூலைப் பெற முடியும்'' என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இணைப் பேராசிரியர் முனைவர் ராஜ்பிரவீன், ஊரக வளர்ச்சி மையம் இயக்குநர் பாலமுருகன், தோட்டக் கலைத்துறை பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவசாயிகள் அதிக மகசூல் பெறுவது குறித்தும், ஒவ்வோரு காலத்திலும் எப்படி பயிர் செய்ய வேண்டும், விளைந்த பயிர்களைச் சந்தைப்படுத்தும் முறை குறித்தும் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்ட சுற்றுவட்ட விவசாயிகள் ஏராளமானவர்கள், இந்த நிகழ்வு பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இயற்கை முறையில் விளைந்த பாசுமதி அரிசி தலா 1 கிலோ வழங்கப்பட்டது. வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் ரெங்கநாயகி நன்றி கூறினார். இதில் வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x