Published : 20 Jan 2022 04:16 PM
Last Updated : 20 Jan 2022 04:16 PM
புதுச்சேரி: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் உள்ள நடமாடும் ரத்ததான ஊர்தியில் உள்ள தமிழ் வாசகங்கள் அகற்றப்பட்டு இந்தி வாசகங்கள் இடம் பிடித்துள்ளன.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் நடமாடும் ரத்ததான ஊர்தி உள்ளது. இந்த ஊர்தியில் ரத்த தானம் செய்வதற்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. பெரும் நிறுவனங்களில் முக்கிய இடங்களில் ரத்த தானம் செய்ய விரும்பினால் இந்த வாகனத்தை எடுத்துச் சென்று ரத்தத்தை தானமாகப் பெற்று அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ரத்ததான ஊர்தியைப் புதுப்பிப்பதற்காக ஹைதராபாத் சென்று தற்போது புதுச்சேரி திரும்பியுள்ளது. இந்த வாகனத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அறியும் வகையில் 'ரத்த தானம் செய்வீர் உயிரைக் காப்பீர்' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது இந்தத் தமிழ் வாசகங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக அந்த இடத்தில் இந்தி வாசகங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ரத்த தான முகாம் நடத்தும் உயிர்த் துளி அமைப்பின் நிறுவனர் பிரபு கூறுகையில், ''அனைத்துத் தமிழ் மக்களும் அறியும் வகையில் ஏற்கெனவே இருந்ததைப் போல் தமிழ் வாசகங்கள் இடம்பெற வேண்டும். தமிழ் வசனங்களை முற்றிலும் அகற்றியது கண்டனத்துக்குரியது'' என்று தெரிவித்தார்.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தினர் தமிழ் வாசகங்களை ஸ்டிக்கரில் தனியாக ஒட்டியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT