Published : 20 Jan 2022 04:00 PM
Last Updated : 20 Jan 2022 04:00 PM
திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மரியம் நகரில் ரத்தம் கக்கிய நிலையில் தெருநாய்கள் உயிரிழந்து கிடந்தன. அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் தெருநாய்கள் பல மடங்கு பெருகியுள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தது 10 முதல் 25 நாய்கள் வரை சுற்றித் திரிகின்றன. இதனால், தெருக்களில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கும் சம்பவங்களும், உணவு கிடைக்காமலும், விபத்துகளில் சிக்கியும் நாய்கள் இறப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. மேலும், தொல்லை தாங்காமல் சில நேரங்களில் தெருநாய்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நேரிடுகின்றன.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட மரியம் நகரில் கடந்த வாரம் ரத்தம் கக்கிய நிலையில் 15-க்கும் அதிகமான நாய்கள் உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது. அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக மரியம் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:
''இந்தப் பகுதியில் 40-க்கும் அதிகமான தெருநாய்கள் இருந்தன. ஆனால், அவை யாரையும் கடித்த சம்பவங்கள் இல்லை. அதே வேளையில், இரவு நேரத்தில் யாரேனும் வரும்போது குரைக்கும். இது, அவற்றின் இயல்பான சுபாவம். இதனிடையே, கடந்த வாரத்தில் திடீரென சில நாய்களைக் காணவில்லை. அவை வேறு எங்கேனும் சென்றிருக்கும் என்று நாங்கள் கருதிய நிலையில், அவை வெவ்வேறு இடங்களில் ரத்தம் கக்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தன.
அவற்றை இதே பகுதியில் பொதுமக்களே புதைத்துவிட்டனர். அவற்றை யாரோ விஷம் வைத்துக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இப்போது 10 நாய்கள் மட்டுமே சுற்றித் திரிவதால், எஞ்சிய நாய்களும் அவ்வாறே கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மாநகராட்சி நிர்வாகமும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறியது:
திருச்சி மாநகராட்சி 57-வது வார்டுக்குட்பட்ட உறையூர் கோணக்கரை சுடுகாடு வளாகத்தில் ரூ.93 லட்சத்தில் புதிதாக நாய்கள் கருத்தடை மையம் கட்டப்பட்டு, 2018-ல் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு ஒரே நாளில் 30 நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும். ஒரே நேரத்தில் 100 நாய்களுக்கு மேல் இங்கு தங்கவைக்க இடவசதியும் உள்ளது. ஆனால், இந்த மையம் முறையாகச் செயல்படாததாலேயே தெருநாய்களின் எண்ணிக்கை பெருகியது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கடந்த சில மாதங்களாக மீண்டும் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், மாநகரில் தெருநாய்களின் பெருக்கம் குறையவில்லை. தெருநாய்களைக் கொல்பவர்கள் மீது சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியது:
நாய்கள் கருத்தடை மையத்தை இயக்க யாரும் முன்வராத நிலையில், போதிய நிதியும் இல்லாததாலேயே சில காலம் இயங்கவில்லை. நிதி ஒதுக்கக் கோரி கால்நடை பராமரிப்புத் துறையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் சமுதாயப் பங்கேற்பு நிதி ரூ.5 லட்சத்தைப் பெற்று, நாய்கள் கருத்தடை மையம் மீண்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 15 நாய்கள் முதல் 20 நாய்கள் வரை கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது.
மரியம் நகரில் நாய் தொல்லை இருப்பது குறித்தோ, நாய்கள் இறந்து கிடந்தது குறித்தோ புகார் வரவில்லை. இருப்பினும் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்கள் தொல்லை குறித்து மாநகராட்சியில் புகார் அளித்தால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT