Published : 19 Jan 2022 09:20 PM
Last Updated : 19 Jan 2022 09:20 PM
கோவை: அலங்கார ஊர்தி விவகாரத்தில் உண்மையை மறைத்து திமுக அரசு அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (ஜன.19) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன.
கரோனா கட்டுப்பாடுகள், பாதுகாப்பு காரணம், பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளை முடிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் அலங்கார ஊர்திக்கு விண்ணப்பித்து இருந்தாலும் 12 ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதனையும் மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழுவே தேர்வு செய்துள்ளது. இந்த உண்மைகளை மறைத்து, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
இருந்தாலும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம். இந்த அலங்கார ஊர்தியை குக்கிராமங்கள் வரை கொண்டுச் செல்ல வேண்டும். வ.உ. சிதம்பரம் பிள்ளை, வேலுநாச்சியார் போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களின் வீர வரலாற்றையும், அவர்களின் தேசியம், தெய்வீகம் தாங்கிய கருத்துக்களையும் மக்களிடம் கொண்டுச் சேர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.
தமிழகத்திலிருந்து இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களை நினைவு கூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு அலங்கார ஊர்தியை, தமிழக அரசு ஏற்பாடு செய்து, மாநிலம் முழுவதும் வலம் வரச் செய்ய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT