Published : 19 Jan 2022 06:36 PM
Last Updated : 19 Jan 2022 06:36 PM
சென்னை: சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பூம்புகார் பாரம்பரிய மீனவர் நலச் சங்கத்தின் செயலாளர் ஜம்புலிங்கம் கபடிக்குஞ்சு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''பாரம்பரிய மீன்பிடி எல்லையில் கட்டுமரங்கள் மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்வோர் சுருக்குமடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறானது. அண்டை மாநிலங்களில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, ''புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. 2000ஆம் ஆண்டில் உள்ள விதிகளைப் பின்பற்றியே புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டு விதிகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. 2000ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்குத் தொடராமல், அதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட விதிகளை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT