Published : 19 Jan 2022 06:04 PM
Last Updated : 19 Jan 2022 06:04 PM
சென்னை: மறைமுகமாகத் தேர்வு செய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத் தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், மொத்தமாக 11 மாநகராட்சிகளைப் பெண்களுக்குமென ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை முழுமையாக வரவேற்கிறேன். சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் உழைக்கும் மக்களான ஆதித் தொல் குடிகளுக்கும், காலங்காலமாக சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படாது வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உள்ளாட்சியில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
சென்னை எனும் பெருநிலத்தைத் தனது அளப்பரிய உழைப்பின் மூலம் உருவாக்கி நிர்மாணித்த, இந்நிலத்தின் பூர்வகுடிகளான ஆதித்தமிழ் மக்களுக்கு சென்னையை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி கோரியிருந்த நிலையில், அத்தார்மீகமான கோரிக்கைக்கு திமுக அரசு செயல்வடிவம் கொடுத்திருக்கும் நற்செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். மதிப்பு மிகுந்த இச்செயல்பாட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றியையும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனைப் போலவே, மறைமுகமாகத் தேர்வு செய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத் தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டுமெனவும், மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றின் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் வகையிலான வாய்ப்பு முறையை மீண்டும் ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன்" என்று சீமான் தெரிவிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT