Published : 19 Jan 2022 03:29 PM
Last Updated : 19 Jan 2022 03:29 PM

மேகேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு: பேரணி சென்ற விவசாயிகள் ஓசூரில் தடுத்து நிறுத்தம்

ஓசூர்: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்ற விவசாயிகளை ஓசூரில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு மற்றும் ராசி மணல் ஆகிய இரு இடங்களில் புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழு அமைக்கப்பட்டு, டெல்டா பகுதி விவசாயிகளிடம் ஆதரவு திரட்டப்பட்டது. இந்த அமைப்பினர் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேற்று மேகேதாட்டுவை முற்றுகையிட முடிவு செய்தனர். இதற்கு மதிமுக, மமக, தமிழக விவசாயிகள் சங்கம், ஐஜேகே, பாமக, தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு முதலே கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைக்கு வரத் தொடங்கினர். முன்னதாக முற்றுகைப் போராட்டம் நடத்த மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள பாதயாத்திரையைத் தடுத்த நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சூழ்ச்சியைக் கைவிட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும், மேகேதாட்டு அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நீதி கேட்டுப் பேரணி முற்றுகைப் போர் என்ற பெயரில் நேற்று திருவாரூரில் இந்தப் பேரணி தொடங்கியது. தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம் வழியாக விவசாயிகள் இன்று ஓசூர் வந்தடைந்தனர். ஓசூர் லால் பகுதியில் இருந்து கர்நாடக மாநில எல்லைப் பகுதியான ஜூஜூவாடி நோக்கிச் சென்றபோது, மாநில எல்லைக்குச் செல்ல போலீஸார் அனுமதி மறுத்து விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாம்பவித சம்பவங்களைத் தடுக்க சேலம் சரக டிஐஜி பிரவின்குமார் அபிநவ் தலைமையில் 540-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தால், மாநில எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x