Published : 19 Jan 2022 01:14 PM
Last Updated : 19 Jan 2022 01:14 PM

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன ஆலை, ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை மற்றும் ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9316 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 25 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.26 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 26.66 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உரிய நேரத்தில் சினை பிடித்து கன்று பெறவும், தரமான பால் மற்றும் அதிக அளவு பால் பெற்று பால் உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியில் இலாபம் ஈட்டவும், கால்நடைகளுக்கு தரமான கால்நடை தீவனம் வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டு, ஈரோடு ஒன்றியத்தில் 1982-ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலை நிறுவப்பட்டு தீவன உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர், இத்தொழிற்சாலையில் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக உயர்த்தப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இத்தீவன ஆலையின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் இயந்திரங்கள் நிறுவி, உற்பத்தி அளவினை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக உயர்த்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1 கோடியே 70 லட்சம் ரூபாயும், ஒன்றிய பங்களிப்பாக 1 கோடியே 70 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன்னாக உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19.1.2022) தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். இதன்மூலம் 19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை சார்ந்த 7792 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு கால்நடைத் தீவனம் வழங்க வழிவகை ஏற்படும்.

கறவையினங்களின் பால் உற்பத்தி, இனப்பெருக்க திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை அதிகரிக்கப்பதில் தாது உப்புக் கலவை பங்கு மிக முக்கியமானதாகும். அவ்வாறு, பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தாது உப்புக் கலவை வழங்கும் பொருட்டு ஈரோடு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் நாளொன்றுக்கு தலா 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலைகள் மூலம் தாது உப்புக் கலவை தயாரிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமும் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொழிற்சாலையில் உற்பத்திச் செய்யப்படும் தாது உப்புக் கலவையில் கறவையினங்களுக்கு தேவையான அனைத்து விதமான தாது உப்புக்கள் சேர்க்கப்பட்டு, ஒரு கிலோ பைகளாக தயார் செய்யப்பட்டு, கிலோ ஒன்றுக்கு ரூ.50/- என்ற விலையில் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதமொன்றிற்கு சுமார் 2.50 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தாது உப்புக் கலவையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ரூ.67.50 இலட்சம் மற்றும் ஒன்றிய பங்களிப்பாக ரூ.67.50 இலட்சம், என மொத்தம் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், இ.ஆ.ப., பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., ஆவின் மேலாண்மை இயக்குனர் மருத்துவர் ந.சுப்பையன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x