Published : 19 Jan 2022 11:40 AM
Last Updated : 19 Jan 2022 11:40 AM
சென்னை: இந்தியன் வங்கியில் வாங்கிய 240 கோடி ரூபாய் கடன் மற்றும் அதற்கான வட்டித் தொகையைச் செலுத்தாத காரணத்தால், சென்னை எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி தியாகராய நகரில் உள்ள சரவணா கோல்டு பேலஸ் மற்றும் ப்ரைம் சரவணா ஸ்டோர் ஆகிய இரண்டு கடைகளை இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
சரவணா கோல்டு பேலஸ் நிறுவனத்தின் சார்பில் 2017ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் 240 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. அதன் பின்னர், இந்தக் கடன் தொகைக்கான அசல், வட்டித் தொகை கட்டப்படாதைத் தொடர்ந்து, வங்கி சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் வங்கியில் பெற்ற கடன்தொகை 240 கோடி ரூபாய், அதற்கான வட்டித் தொகை 160 கோடி ரூபாய் என மொத்தமாக சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் வங்கிக்குச் செலுத்த வேண்டியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தியாகராய நகரில் உள்ள இரண்டு சொத்துகளை ஜப்தி செய்ய 2021 டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் மற்றும் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சரவணா கோல்டு பேலஸ் ஆகிய இரண்டு கடைகளையும் இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஜப்தி செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT