Published : 19 Jan 2022 08:54 AM
Last Updated : 19 Jan 2022 08:54 AM
பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தனியார் தமிழ் சேனலுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் சி.டி.நிர்மல்குமார் அனுப்பிய புகாரின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நோட்டீஸ் தொடர்பாக, சம்மபந்தப்பட்ட சேனல் 7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சி.டி.நிர்மல்குமார் தனது புகார் கடிதத்தில், "கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பிரதமர் மோடியை பகடி செய்தனர்.
அவர் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார்மயமாக்குதல் கொள்கை ஆகியனவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர். 10 வயதே நிரம்பிய அந்த சிறாருக்கு நிச்சயமாக அவர்கள் பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது.
இது தவறான செய்தியைக் கடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தை சேனல் திரும்பப் பெற வேண்டும். அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும். சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளை அரசியல் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்களது மவுனம் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகக் கருதப்படக்கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தனியார் தமிழ் சேனலுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT