Published : 13 Jun 2014 06:10 PM
Last Updated : 13 Jun 2014 06:10 PM

கர்நாடக மனுவில் உண்மைக்கு மாறான தகவல்: காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் தலைமையிலான குழுவினர் அளித்த மனுவில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் எது உண்மை என்பது பற்றியும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா 31 பக்க கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட கடிதத்தின் விவரம்:

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்கு முறை குழு ஆகியவற்றை அமைக்கும் விவகாரத்தில் அப்படி ஒரு திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அமைச்சர்கள் அனந்த் குமாரும் அதேபோல் வெங்கய்ய நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் தலைமையிலான குழுவினர் தங்களைச் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பாக கொடுத்துள்ள மனுவில், உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதை அறிந்தும், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அர்த்தமற்றதாக்கும் வகையிலும் அது அமைந்திருப்பதைத் தொடர்ந்தும் இக்கடிதத்தினை தங்களுக்கு எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

தமிழகத்துக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிய பங்கு நீரைத் தராமல், காவிரியில் தனக்கு மட்டுமே அதிக பங்கு இருப்பதைப் போன்று கர்நாடகம் தொடர்ந்து நடந்து வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி நடுவர் மன்றம் 1990-ல் அமைக்கப்பட்டது. 1991-ல் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில், தமிழகத்துக்கு ஓராண்டில் 205 டிஎம்சி நீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகம் இதற்கு எதிராக அவசரச்சட்டத்தைப் பிறப்பித்தது. குடியரசுத் தலைவரது தலையீட்டின் பேரில் அந்த அவசரச் சட்டத்தை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மேலும், இடைக்கால தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மத்திய அரசும் அவ்வாறே வெளியிட்டது. ஆயினும், கர்நாடகம் உரிய நீரை அப்போதும் தரவில்லை. வெள்ளம் வந்தால் மட்டுமே நீரைத் திறந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்தது. இதற்கிடையே, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், 1998-ல் காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தார். அதை நான் எதிர்த்தேன். தமிழகத்துக்கு, அரசியலமைப்புச் சட்டம் 141 மற்றும் 142-ன்படியும், சட்டப்படியும் நீரைப் பங்கிட்டுத் தரக் கோரினேன். எனினும், அரசியல் காரணங்களால் நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை காவிரி நதிநீர் ஆணையம் அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், நடுவர் மன்றம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 5.2.2007-ல் தனது இறுதித்தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகம்-270, கேரளம்-30, புதுச்சேரி- 7 டிஎம்சி உள்பட 740 டிஎம்சி நீரைப் பங்கிடுவதற்கான விகிதாச்சாரத்தை அறிவித்து உத்தரவிட்டது. மேலும், இருமாநில எல்லையில் உள்ள பில்லிகுண்டுலு பகுதியை 192 டிஎம்சி நீர் ஓராண்டில் கடந்து தமிழகத்தை அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த உத்தரவினை மத்தியில் திமுக ஆதரவுடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. எனினும், நான் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றபிறகு, மேற்கொண்ட தீவிர முயற்சியால், அரசிதழில் மேற்கண்ட தீர்ப்பை மத்திய அரசு வெளியிட்டது.

ஆயினும், அந்த தீர்ப்பின் பலன் தமிழகத்துக்கு முழுமையாகக் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை அமைக்க வேண்டிய அரசியலமைப்புரீதியான கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசு அதை செயல்படுத்தவில்லை. இது தொடர்பான தீர்ப்பின் அம்சங்களை தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

கர்நாடகம் முறையாக நீரைத் திறக்காததால் கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையை உரிய நேரத்தில் எங்களால் திறக்க முடியவில்லை. இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பொருளாதாரத்தையும், ஏன் தேசத்தையும் பாதிக்கும்.

இந்நிலையில், கர்நாடகக் குழுவினர் தங்களிடம் உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பது போல் மத்திய அமைச்சர்களும் பேட்டி அளித்துள்ளனர்.

எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி டெல்டா விவசாயிகளின் நலன் காக்க காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x