Published : 19 Jan 2022 10:43 AM
Last Updated : 19 Jan 2022 10:43 AM
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதியம்மன் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி அங்குள்ள பொற்றாமரை குளத்தில் நடைபெற்றது.
கரோனா கட்டுப்பாடு காரணமாக சுவாமி நேற்று முன்தினம் தைப்பூச மண்டபத்துக்கு செல்லவில்லை. கோயிலுக்குள் உள்ள பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை, கும்பபூஜை நடைபெற்றது. 10.30 மணிக்குநெல்லையப்பர், காந்திமதி அம்மன்,அகஸ்தியர், குங்கிலிய கலியநாயனார், தாமிரபரணி, சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகியோர் பொற்றாமரை குளம் அருகே எழுந்தருளினர்.
11 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் 12.05 மணிக்குஅஸ்திரதேவர், அஸ்திர தேவிஆகியோருக்கு பொற்றாமரைகுளத்தில் மேள வாத்தியம் முழங்க தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.கோயில்முன் திரண்டிருந்த பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமிகோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. 10 மணிக்கு குடவரை கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு சாலைகுமாரசுவாமி கோயில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணிய சுவாமிகோயில் மற்றும் பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோயிலில் முருகப் பெருமான், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலையில் கணபதி ஹோமம்நடைபெற்றது. தொடந்து, மலை மேல் உள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து, முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதேபோல், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில், இலஞ்சி குமாரர் கோயில், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் தைப்பூச 10 நாள் திருவிழா நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்றது. நேற்று முன்தினம் தேரோட்டமும், நேற்று புகழ்பெற்ற தாமிரபரணி தீர்த்தவாரியும் ரத்து செய்யப்பட்டன. கோயிலுக்குள் பக்தர்கள் பங்கேற்பின்றி சுவாமி, அம்பாள், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நேற்று சென்றனர். தரிசனத்துக்கு அனுமதி யில்லாமல், பலரும் கடற்கரையிலும், தூண்டிகை விநாயகர் கோயிலிலும் வழிபாடு நடத்தினர். இன்னும் பலர் திருச்செந்தூரில் தங்கி இருந்து இன்று கோயிலுக்குள் தரிசிக்கும் எண்ணத்தில் காத்திருக்கின்றனர். இன்னும் பல குழுக்கள் இன்றைக்கு தங்கள் ஊர்களில் இருந்து யாத்திரையை தொடங்க இருக்கின்றனர்.
பக்தர்கள் இல்லாமல் கோயில் வெறிச்சோடிக் கிடந்தது. எனினும், ஆகம முறைப்படி அஸ்திர தேவருக்கு நேற்று காலை கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. சுவாமி அலைவாய் உகந்த பெருமான் பிரகார வலம் வந்தார். மூலவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT