Published : 18 Jan 2022 05:54 PM
Last Updated : 18 Jan 2022 05:54 PM

தொடரும் விசாரணை மரணங்கள்; காவல்துறை அத்துமீறாமலிருக்க முதல்வருக்குப் பொறுப்பு உண்டு: மக்கள் நீதி மய்யம் 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப்படம்.

சென்னை: விசாரணை மரணங்கள் தொடரும் நிலையில், காவல்துறையில் அத்துமீறல்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உண்டு என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் திருட்டு வழக்கில் சேந்தமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லையென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்தான் மரணமடைந்தார் எனும் சந்தேகம் வலுத்து அவரது உறவினர்களும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய பின்னரே சேந்தமங்கலம் காவல்துறையினர் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை ஒடுக்கியபோதும், ஊரடங்கை நடைமுறைப்படுத்துகிறேன் எனும் பெயரில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டபோதும், சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவத்தின்போதும் தமிழக காவல்துறை மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. புதிய அரசு வந்த பிறகாவது இத்தகைய அத்துமீறல்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தமிழகத்தில் மனித உரிமைகளும், சட்ட நடைமுறைகளும் மதிக்கப்படுகின்றனவா எனும் வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டி அமைதியை ஏற்படுத்த வேண்டிய காவல்துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறதா எனும் அச்சம் ஏற்படுகிறது.

இதுபோன்ற அத்துமீறல்கள் இனியும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக முதல்வருக்கு உண்டு. பிரபாகரன் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள சூழலில், இந்த விசாரணையானது விரைந்து முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்; இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்'' என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x