Last Updated : 18 Jan, 2022 05:50 PM

 

Published : 18 Jan 2022 05:50 PM
Last Updated : 18 Jan 2022 05:50 PM

புதுச்சேரியில் போலீஸ் காலிப் பணியிடங்கள்: நாளை முதல் உடல் தகுதித் தேர்வு தொடக்கம்

புதுச்சேரி: மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் உடல் தகுதித் தேர்வு தொடங்குகிறது. சுழற்சி முறையில் அதிகாரிகள் நியமிக்கப்படுவதுடன் செல்போன் எடுத்து வரத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள காவலர்- 390, ரேடியோ டெக்னீஷியன்- 12 மற்றும் டெக் ஹேண்ட்லர்-29 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் கடந்த ஆட்சியில் பெறப்பட்டன. அப்போது ஆளுநர் கிரண்பேடிக்கும் அமைச்சரவைக்கும் இடையேயான மோதலால் இத்தேர்வு நடப்பது தள்ளிப்போனது. பணிக்கு விண்ணப்பித்து ஏராளமான இளையோர் காத்திருந்தனர். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை முதல் தேர்வு தொடங்குகிறது.

இத்தேர்வுக்கு மொத்தம் 17 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் காவலர் பணிக்கு-13,970, ரேடியோ டெக்னீஷியன்- 229, டெக் ஹேண்ட்லர்-558 என 14,787 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2,440 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை காலை 6 மணிக்கு கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் தொடங்கி பிப்ரவரி 21-ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் தேர்வில் கலந்துகொள்ள 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு காலை 6, 8, 10 மணி என 3 பிரிவுகளாக நடைபெற உள்ளது.

புதுச்சேரி கோரிமேடு காவலர்கள் பயிற்சி மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ள இடத்தில் ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், டி.ஐ.ஜி. மிலிந்த் தும்ப்ரே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வர்கள் டிஜிட்டல் முறையில் உயரம், எடை மற்றும் ஓட்டத்தைக் கணக்கிடும் கருவிகள் சோதனை செய்யப்பட்டன. சிசிடிவி கேமரா பொருத்தப்படும். பணிக்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. போலீஸ் உயர் அதிகாரிகள் தொடங்கி போலீஸார் வரை தேர்வுப் பணியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் தேர்வு நடப்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முறைகேடு நடந்தால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். மொபைல் போன் கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. அதிகாரிகள் சுழற்சி முறையில் அடிக்கடி மாற்றப்படுவார்கள் என்றும் ஏடிஜிபி ஆனந்தமோகன் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பதாரர்களுக்கு 24 மணி நேரத்துக்குள்ளான ரேபிட் பரிசோதனை முடிந்து கரோனா சான்று கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதியானால் அவர்களுக்கு மாற்றுத் தேதியும் தெரிவிக்கப்படவுள்ளது. ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்க கடும் கட்டுப்பாட்டு சோதனைகளும், ஆவணங்கள் சரிபார்ப்பும் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் சரியான ஆடைகளை அணிந்து வரவேண்டும். மொபைல் போன் அனுமதியில்லை என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் காவல்துறையில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளதால் நடப்பாண்டுக்குள் ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x