Published : 18 Jan 2022 11:36 AM
Last Updated : 18 Jan 2022 11:36 AM

எம்ஜிஆர் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்ட திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

கோப்புப் படம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்ட திமுக அரசைக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு 16.01.2022 அன்று வெளியிட்ட, செய்தி வெளியீடு எண் 111-ல், மறைந்த முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்களை, அரசின் சார்பாக வெளியிட்டுள்ளதற்கு என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் கட்சி வரலாறும், தமிழக அரசியல் வரலாறும் தெரியாத ஒருவரை முதல்வராகப் பெற்றிருப்பது தமிழகத்தின் தலையெழுத்து என்றே கருதுகிறேன். தன்னை திமுகவின் தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கிய கட்சியின் பொருளாளரான எம்ஜிஆரையே, கணக்கு கேட்டார் என்பதற்காக கட்சியை விட்டே நீக்கி,
ஏறிய ஏணியை எட்டி உதைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுகள் பொய்யையும், புனைச் சுருட்டையும் மூலதனமாக்கி அரசியல் நடத்துவது விந்தையானதல்ல.

திமுக அரசின் செய்திக்குறிப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய 'மருதநாட்டு இளவரசி', 'மந்திரி குமாரி' வாயிலாகத் தனக்கென்று தனியிடம் பெற்றவர் எம்ஜிஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சினிமாவில் நுழையவே முடியாத நிலையில், திரைத்துறையே வேண்டாம் என்று கோவையில் இருந்து தனது சொந்த ஊரான திருக்குவளைக்குச் சென்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பது வரலாறு.

இதை அறிந்த எம்ஜிஆர், தனது தமையனார் பெரியவர் அமரர் எம்.ஜி.சக்ரபாணியை விட்டு கருணாநிதிக்குக் கடிதம் எழுதி, அவரை மீண்டும் கோவைக்கு வரவழைத்து, பட்சிராஜா ஸ்டுடியோவில் 'மருதநாட்டு இளவரசி' படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர். 'மருதநாட்டு இளவரசி', 'மந்திரிகுமாரி' ஆகிய படங்கள் வருவதற்கு முன்னரே, 'என் தங்கை', 'மர்ம யோகி', 'சர்வாதிகாரி' போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சியவர் எம்ஜிஆர். அனைத்திற்கும் மேலாக, கருணாநிதி எழுதியதாக சொல்லப்படும் வசனங்களை, எங்களது எம்ஜிஆரும், அவரது தம்பி நடிகர் திலகமும், தங்களுடைய படங்களில் உச்சரித்ததால்தான் கருணாநிதியின் எழுத்துகளுக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு.

திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் தெரிந்த இந்த உண்மைகள், எம்ஜிஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய இன்றைய முதல்வரின் உறவினர் சொர்ணத்துக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர் இன்று நம்மிடம் இல்லை என்பதுதான் இயற்கையின் சதி. இந்த உண்மைகளை மறைத்து வரலாற்றை திருத்தி எழுதிய கோமான்களை என்னவென்று சொல்வது? அடுத்து, 1986-87 காலகட்டத்தில், தமிழகத்தில் மருத்துவத் துறைக்கென்று தனியாகப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க எம்ஜிஆரின் அரசு முடிவெடுத்தது. இதற்கான முன் முயற்சிகளை அன்றைய அமைச்சர்கள் முத்துசாமி (இன்றைய திமுக அமைச்சர்) மற்றும் டாக்டர் ஹண்டே ஆகியோர் மேற்கொண்டனர். சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த இன்பசாகரன் முன்னின்று மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றார்.

1987, டிசம்பர் 25-ல் பல்கலைக்கழகத் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எம்ஜிஆர் தலைமையில், அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பல்கலைக்கழகத்தைத் திறப்பது என்று முடிவானது. மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு "டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்” என்று பெயர் வைக்க அமைச்சர்கள் முடிவு செய்து, அன்றைய முதல்வர் எம்ஜிஆர் சொன்னார். உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை வைக்கக்கூடாது எனக் கூறி அவர் அதை மறுத்தார். ஆனால், முத்துசாமியும், மற்ற அமைச்சர்களும், எம்ஜிஆரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர்.

எம்ஜிஆரின் எண்ணப்படியே, திறப்பு விழாவிற்கு முதல் நாளான டிசம்பர் 24-ம் நாள் எம்ஜிஆர் நம்மை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார். அதன்பின், 1989-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி வேறு வழியின்றி, தமிழ்நாடு என்று ஒரு வார்த்தையைச் சேர்த்து “தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்” என்று, அதே குடியரசுத் தலைவரை வைத்து திறப்பு விழா நடத்தினார். தற்போது தன் அருகே வீட்டுவசதித் துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமியிடமும், மூத்த அரசியல் தலைவர் டாக்டர் ஹண்டேவிடமும், இது சம்பந்தமான முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இனியாவது, திமுக அரசு, தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகளில், வரலாற்றைத் திரிக்காமல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, எம்ஜிஆரைப் பற்றிய வரலாற்றைத் திரித்து, தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்கள்'' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x