Published : 02 Apr 2016 10:44 AM
Last Updated : 02 Apr 2016 10:44 AM

தி இந்து மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய ‘வாக்காளர் வாய்ஸ்’ விழாவில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ஜனநாயகத்தில் இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமைக்காக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தி இந்து சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தேர்தல் ஜனநாயகத்தின் பெருமையைப் பேசும் ‘வாக்காளர் வாய்ஸ்’ மாணவர் திருவிழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. தி இந்து மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், தி இந்து நடுப்பக்க ஆசிரியர் சமஸ், கே.எம்.ஜி. கல்லூரித் தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், கல்லூரிச் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவரும் எழுத்தாளருமான கி.பார்த்திபராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தனர்.

ஆர்.நந்தகோபால் (வேலூர் ஆட்சியர்)

இந்தத் தேர்தலில் இளைஞர்கள் ஜனநாயக கடமையாற்ற முன்வரவேண்டும். தேர்தல் என்றால் நான்கு நாள் விடுமுறை கிடைக்கும் என நினைக்காமல் தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற தேர்தலில் ஜனநாயக கடமையாக கருதி வாக்களிக்க வேண்டும்.

பணம், பரிசுப்பொருள் வாங்காமல் யாருக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தல் அன்று உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.

கே.எம்.ஜி.சுந்தரவதனம் (கே.எம்.ஜி கல்லூரி தலைவர்)

இங்குள்ள மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் விழிப் புணர்வை ஏற்படுத்தியதால் இந்தத் தேர்தலில் 25 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பதிவாகும். மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியால் 100 சதவீதம் வாக்குப் பதிவாகும்.

கி.பார்த்திபராஜா (பேராசிரியர்)

18 வயது பூர்த்தியடைந்த சிந்திக்க ஆற்றல் உள்ள எல்லோருக்கும் வாக்குரிமை கிடைத்துள்ளது. நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் நபர்தான் நமது தலைவிதியை தீர்மானிக்கப் போகிறவர்கள். விகிதாச்சாரம் அடிப்படை தேவை என்றும், தேர்ந்தெடுத்து அனுப்பப்படுபவர்களை திரும்பப் பெறும் உரிமை அதிகாரம் வேண்டும் என்ற குரலும் எழுப்பப்படுகிறது.

சமஸ் (தி இந்து நடுப்பக்க ஆசிரியர்)

இந்த நாட்டில் உனக்கென்று தனி பெயர், அதிகாரம், தனித்து வம் இருக்கிறது. இந்த பெயரை வைத்துதான் வாக்களிக்க வேண்டும் என்ற அடையாளத்தை தேர்தல் காட்டியது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார், லண்டனில் படித்து இந்தியாவில் வேலைக்கு வந்தார். அவரது கணித அறிவுதான் இன்றைய தேர்தலுக்கு அடிப்படை.

அந்தக் காலக்கட்டத்தில், இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கும் எனக்கும் உள்ள அந்தரங்க உறவாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை மனைவிக்குக்கூட சொல்ல மாட்டேன் என்றார்கள். அப்படி ஒரு பிடிமானம் இருந்த தாத்தா, பாட்டிகளின் பேரன்களாகிய நாம் எப்படி இருக்கிறோம்.

இந்தியாவில் மட்டும்தான் 18 வயது நிரம்பியவர் தனித்துவம் தெரியாமல் முடிவெடுக்கும் திராணி இல்லாமல் இருக்கிறார்கள். மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து ஜனநாயக கடைமையை நிறை வேற்ற உயர்நீத்த தியாகிகளை நினைத்து உங்கள் வாக்கை சரியாக தீர்மானியுங்கள் என்றார்.

நிகழ்ச்சியை தி இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

கல்லூரி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி

கல்லூரி வளாகத்தில் முதல் முறை வாக்காளர்களுக்காக மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அங்கு, வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிப்பது. இடது ஆள்காட்டி விரலில் மை வைக்கும் நடைமுறை மற்றும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து விளக்கப்பட்டது.

மேலும், மாதிரி வாக்குச்சாவடியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு நடைபாதை, சக்கர நாற்காலி வசதி செய்திருந்தனர். மாதிரி வாக்குச்சாவடியில் ஏராளமான மாணவ, மாணவிகள் வாக்களிக்கும் நடைமுறையை ஆர்வத்துடன் தெரிந்துகொண்டனர்.

‘‘ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதி மொழிகிறோம்’’ என்று மாணவ, மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். இதன் பின்னர் உறுதிமொழி பத்திரத்தில் 1,400 மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.

படங்கள்: விஎம்.மணிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x