Published : 17 Jan 2022 06:10 PM
Last Updated : 17 Jan 2022 06:10 PM

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

டெல்லியில் 2020-ல் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி கம்பீரமாக வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. | கோப்புப் படம்.

சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லியில் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இடம்பெற்று காண்போரை கவர்ந்திழுக்கும். அதற்காக மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும்.

இந்த ஆண்டு தமிழக அரசும் மாநிலத்தின் சார்பாக இடம்பெற வேண்டிய ஊர்திகளின் மாடல்களை அனுப்பியிருந்தது. ஆனால், இம்முறை தமிழக அரசு அனுப்பிவைத்த மாடல்களையெல்லாம் மத்திய அரசு நிராககரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முக்கிய விழாவான குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x