Published : 17 Jan 2022 07:22 AM
Last Updated : 17 Jan 2022 07:22 AM
சென்னை: கரோனா பாதிப்பால் ரயில்வே துறை வருவாய் இழப்பை சந்தித்து வரும் சூழலில், மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டுமென தமிழக ரயில் பயணிகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மத்திய அரசின் 2022-23-ம்நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, தங்கள் மாநிலங்களுக்குத் தேவைப்படும் ரயில்வே திட்டப் பட்டியலை மாநில அரசுகள் தயாரித்து வருகின்றன.
தமிழகத்தில் பிரதானமான சென்னை- கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை திட்டம் 1998-ல் தொடங்கி, தற்போது மதுரை வரை முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக மதுரை-கன்னியாகுமரி வரையில் மின்மயமாக்கலுடன் இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி2022 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என 2017-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்பு, நிதிநெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என பல்வேறு காரணங்களால் இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இதேபோல, சென்னை-மகாபலிபுரம்-கடலூர் (179 கி.மீ.), திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை (70 கி.மீ.), திண்டிவனம்-நகரி (179 கி.மீ.) அத்திப்பட்டு- த்தூர் (88 கி.மீ.), ஈரோடு- பழநி (91 கி.மீ.), மதுரை - அருப்புகோட்டை (143 கி.மீ.), பெரும்புதூர்-இருங்காட்டுக்கோட்டை- கூடுவாஞ்சேரி (60 கி.மீ.), மொரப்பூர்- தருமபுரி (36 கி.மீ.), ராமேசுவரம்- தனுஷ்கோடி (17 கி.மீ.) உட்பட 9 ரயில் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.இவற்றின் மதிப்பு ரூ.4,445 கோடி. ஆனால், இதுவரை ரூ.1,000 கோடி நிதிகூட ஒதுக்கவில்லை.
எனவே, தமிழகத்தில் நடைபெறும் ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.60,000 கோடி இழப்பு
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி முதல்ரூ.6 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டி வந்த ரயில்வே, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.60 ஆயிரம்கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
குறிப்பாக, கடந்த மார்ச் வரை மட்டும் ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாகாலத்தில் ரயில் சேவை முடக்கமே இதற்கு முக்கியக் காரணம்.
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
எனவே, மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். புதிதாக திட்டங்கள் சேர்ப்பதை தவிர்த்து, தமிழகம் உட்பட தெற்கு ரயில்வேக்கு அவசியமான, தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் பட்டியலை மத்திய அரசிடம் வழங்கியுள்ளோம். வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதியை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தனியார் ரயில் சேவை மூலம்ஓரளவுக்கு வருமானம் கிடைக்கிறது. இருப்பினும், புதிதாக வெளியிடப்பட்ட டெண்டரில் தனியார்ரயில்களை இயக்க பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை’’ என்றனர்.
தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்க (டிஆர்இயு) உதவித் தலைவர் இளங்கோவன் கூறும்போது, ‘‘ரயில்வேயில் மத்திய அரசு முதலீடுதான் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான ரயில் சேவையை சிறப்பாக செயல்படுத்த முடியும். தனியார் மூலம் ரயில்கள் இயக்கினாலும் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது. எனவே, தனியார் ரயில்கள் இயக்கும் முடிவைக் கைவிட வேண்டும். அதற்கு மாறாக, ரயில்வேயில் மத்திய அரசு முதலீடு செய்து, ஏற்கெனவே திட்டமிட்டுள்ள தனியார் வழித்தடங்களில் ரயில்வே சார்பில் ரயில்களை இயக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT