Published : 17 Jan 2022 07:28 AM
Last Updated : 17 Jan 2022 07:28 AM
காஞ்சிபுரம்: காஞ்சி பெருநகராட்சியில் 51 வார்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும்,பல வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. நகர பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 20 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளன.
இந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்காக, திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும்ரப்பர் உள்ளிட்டைவற்றை தரம்பிரித்து, அவை பயோ மைனிங்தொழில்நுட்பத்தில் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதன்மூலம், கடந்த 12 ஆண்டுகளாக தேங்கியிருந்த குப்பை அகற்றப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது நகரப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், பிளாஸ்டிக் கழிவுகளுடன் கூடிய குப்பை சேகரிப்பட்டு நத்தப்பேட்டை ஏரியில் கொட்டப்பட்டு வருகிறது.
ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பை, தண்ணீரில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. நத்தப்பேட்டை ஏரி மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, குடியிருப்பாளர்கள் சிலர் கூறியதாவது: தரம் பிரிக்கப்படாமல் கடந்த பல ஆண்டுகளாக மலைபோல் தேங்கியிருந்த குப்பை தற்போதுதான் அகற்றப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் கூடிய குப்பை ஏரிக்கரையில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைக் கிடங்கில் கனரக வாகனங்கள் செல்லும்வகையில் சாலை அமைக்கப்படாததால், முதன்மை சாலையிலேயே குப்பை கொட்டப்பட்டு சாலை முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
மேலும், மக்காத தன்மை கொண்ட கழிவுகளுடன் கூடிய குப்பை ஏரியில் கொட்டப்படுவதால் தண்ணீரில் ஊறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியும் கடுமையாக மாசடைந்துள்ளது. மேலும், கொசு உற்பத்தியும் அதிகரித்தது என்றனர்.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: நகரில்குப்பை தரம் பிரித்து வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த2020-ம் ஆண்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், கரோனா தொற்றுகாரணமாக ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு குப்பை சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், தூய்மை பரப்புரையாளர்களும் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. அதனால்,குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், நத்தப்பேட்டை ஏரி மாசடைவதைத் தடுக்கவும், குப்பை தரம் பிரிப்பு பணிகளை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT