Published : 17 Jan 2022 09:57 AM
Last Updated : 17 Jan 2022 09:57 AM
வேலூர் மாவட்டத்தில் இன்று 3 இடங்களில் எருது விடும் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட தேதிகளை ஒதுக்கி அனுமதி வழங்கியுள்ளது. எருது விடும் விழாவில் கரோனா விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர மாவட்டத்தில் நேற்று முன்தினம் (15-ம் தேதி) 4 இடங்களில் எருது விடும் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று (17-ம் தேதி) வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் எருது விடும் திருவிழா நடைபெறவுள்ளது. அதன்படி, கே.வி.குப்பம் அடுத்த கீழ் முட்டுக்கூர் கிராமம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு கிராமம், குடியாத்தம் அடுத்த வீரிச்செட்டிப்பள்ளி வி.மத்தூர் கிராமம் என 3 இடங்களில் எருது விடும் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
முழு பாதுகாப்புடன் விழா
3 இடங்களிலும் கரோனா விதிமுறைகள், பாதுகாப்பு ஏற் பாடுகளை கண்காணிக்க காவல் மற்றும் வருவாய்த் துறையினர் அடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையினர் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளை பரிசோதனை செய்த பிறகே விழாவில் கலந்து கொள்ள சான்றளிப்பார்கள். அதேபோல, காளையின் உரிமையாளர்கள் கரோனா பரிசோதனை சான்றிதழை வருவாய்த் துறையினர் காட்டி உரிய அனுமதி பெற வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விழா குழுவினர்களுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் அறிவித்த நேரத்தில் மட்டுமே காளைகளை அவிழ்த்து விட வேண்டும். பொதுமக்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கரோனா விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விழாவை காணவரும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை பின் பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறினால் விழா ரத்து செய்யப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT