Last Updated : 02 Apr, 2016 03:25 PM

 

Published : 02 Apr 2016 03:25 PM
Last Updated : 02 Apr 2016 03:25 PM

தேர்தல் வரலாற்றில் தென்காசியில் முதல் இடைத்தேர்தலை திமுக வென்றது எப்படி?

தமிழக தேர்தல் வரலாற்றில் ஒவ்வொரு மண்ணுக்கும் தனி சிறப்புகள் உண்டு. அவற்றில் தடம் பதித்த நிகழ்வுகள் பலவும் திருநெல்வேலி, தூத்துக்குடியை உள்ளடக்கிய திருநெல்வேலி சீமையில் நிகழ்ந்திருக்கின்றன.

போட்டியின்றி தேர்வு

தென்காசியில் திமுக சந்தித்த முதல் இடைத்தேர்தல், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியின்றி எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட பழைய வரலாற்று சம்பவங்களை வரலாற்று ஆய்வாளர் செ.திவான் நினைவுகூர்ந்தார். அவர் கூறியதாவது: இப்போது பலமுனைப் போட்டி உருவாகியிருக்கிறது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். அப்போதிருந்த திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் 1957-ம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளர் டி.கணபதியும், 1962-ல் டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக வெற்றி

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் முதன்முதலில் தென்காசியில்தான் இடைத்தேர்தல் நடந்தது. 1967-ல் இத்தொகுதியில் வெற்றிபெற்றிருந்த காங்கிரஸை சேர்ந்த சிதம்பரம் பிள்ளை 1968-ல் காலமானார். இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் திமுக சார்பில் சம்சுதீன் என்ற கா.மு.கதிரவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மு.கருணாநிதி உட்பட 8 அமைச்சர்கள் இத்தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். இந்த இடைத்தேர்தலுக்கான செலவுகளை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவராக இருந்த சி.பா.ஆதித்தனார் மேற்கொண்டார்.

செங்கோட்டையில் காந்தி சிலை முன் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அப்போதைய முதல்வர் அண்ணா பேசினார். அப்போது எனக்கு 14 வயது. அந்த கூட்டத்தில் அண்ணா பேசும்போது, “ஒரு விருந்தில் இலை விரித்து அறுசுவை பண்டங்களையும் வைத்திருப்பதுபோல், தமிழக மக்கள் திமுகவுக்கு ஆட்சி என்ற விருந்தை அளித்திருக்கிறீர்கள். அதில் இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது ஊறுகாய் போன்றது. அறுசுவை விருந்தில் ஊறுகாய் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்?” என்று தனக்கே உரிய பாணியில் அண்ணா பேசினார்.

எம்ஜிஆர் படம்

இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக கொண்டு, புதிய பூமி என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த கதாபாத்திரத்தின் பெயர் கதிரவன். தென்காசி தொகுதி திமுக வேட்பாளரின் பெயரும் கதிரவன்தான். இப்படி பல்வேறு யுக்திகளை கையாண்டது திமுக. இறுதியில், இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார் என்றார் அவர்.

காலையில் திமுக; மாலையில் காங்கிரஸ்

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1989-ல் நடைபெற்ற தேர்தலின்போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவம் குறித்து திருநெல்வேலியை சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஜேசிஐ முன்னாள் தலைவருமான ஜெ. பிரின்ஸ் கூறியதாவது:

1989-ம் ஆண்டில் ஆலங்குளம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் எம்.பி.முருகையா, காங்கிரஸ் சார்பில் எஸ்.எஸ்.ராமசுப்பு, அதிமுக ஜானகி அணி சார்பில் ஆலடி அருணா, அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் முருகையா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் நாளிதழ்களில் இந்த வெற்றி குறித்த செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இத்தொகுதியில் ஒரு வாக்குப்பெட்டியிலிருந்த வாக்குகள் எண்ணப்படவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு புகார் தெரிவித்தார். அதையடுத்து வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. இறுதியில் 900-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ராமசுப்பு வெற்றி பெற்றார். அந்த செய்தி அன்றைய மாலை நாளிதழ்களில் வெளிவந்தது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x