Published : 16 Jan 2022 08:28 AM
Last Updated : 16 Jan 2022 08:28 AM
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 486 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் அவிழ்த்துவிடுவதற்காக காளையைக் கூட்டிச் சென்றபோது, அந்தக் காளை எதேச்சையாக முட்டியதில் காளையின் உரிமையாளர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு பெரிய சூரியூரில் நேற்று நடைபெற்றது. இதனை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். முதலில் பெரிய சூரியூர் மற்றும் சின்ன சூரியூர் கோயில் காளைகளும், தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 400 மாடுகளை அவிழ்த்துவிடவும், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி மாலை 4.15 மணி வரை, 486 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
ஜல்லிக்கட்டை பார்வையிட கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி மட்டுமின்றி புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்திருந்தனர்.
வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடுவதற்காக காளையைக் கூட்டிச்சென்ற ரங்கம் கொள்ளிடக்கரையைச் சேர்ந்த கோ.மீனாட்சி சுந்தரம்(29) என்பவரை, அவரது காளையே எதேச்சையாக முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், போட்டியின்போது காளைகள் முட்டியதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆண்டிமடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் கலைவாணன் உட்பட 52 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசாக தலா ஒரு மோட்டார் சைக்கிள், 2-ம் பரிசாக எல்இடி டிவி மற்றும் தங்க மோதிரம், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT