Published : 15 Jan 2022 05:08 PM
Last Updated : 15 Jan 2022 05:08 PM
சென்னை : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்கள் மற்றும் தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து கடந்த 10 நாட்களில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு 1,51,124 அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதித்த நபர்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு (Screening Centers) மாநகராட்சியின் கோவிட் சிறப்பு வாகனங்களின் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பரிசோதனைகளுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் (Tele-Counseling Centers) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டிடத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தொலைபேசி அழைப்பாளர்கள் வீட்டுத் தனிமையில் உள்ள நபர்களிடம் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கரோனா தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருக்கிறதா என கேட்டறிந்து 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு அறிகுறிகள் தொடர்ந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், வீட்டில் கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை உள்ளதா எனவும், அவர்களின் இல்லங்களுக்கு கரோனா தன்னார்வலர்கள் வருகை தருகிறார்களா எனவும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் குறித்து கேட்கப்பட்டு அதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மண்டலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களில் 21 மருத்துவர்கள், 140 தொலைபேசி அழைப்பாளர்கள் மற்றும் தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தில் ஒரு துணை ஆட்சியர், 2 மருத்துவர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிய 45 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தலைமையிடம் மற்றும் மண்டல தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து 06.01.2022 முதல் இன்று 15.01.2022 வரை கரோனா தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு 1,51,124 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி இன்று (15.01.2022) தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொலைபேசி ஆலோசனை மையத்தை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்திற்கு வார்டு 110, 3 வது குறுக்கு தெருவில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று தொற்று பாதித்த நபர்களிடம் அவர்களுக்கு மாநகராட்சி தொலைபேசி ஆலோசனை மையங்களில் இருந்து நாள்தோறும் அழைப்புகளின் மூலம் உடல்நிலை குறித்த தகவல்கள் கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறதா எனவும், கரோனா களப்பணியாளர்கள் நாள்தோறும் இல்லங்களுக்கு வருகைபுரிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் மனிஷ், மத்திய வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் மண்டல அலுவலர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்' என்று சென்னை மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT