Published : 15 Jan 2022 12:15 PM
Last Updated : 15 Jan 2022 12:15 PM
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மிக வான்வெளியில் ஒரு பிரகாசமான சூரியன் திருவள்ளுவர். மனித குலத்திற்கு அவரால் வழங்கப்பட்ட மிகப் பெரிய சொத்து திருக்குறள். இந்தியாவின் நித்திய உலகளாவிய ஆன்மிகத்தின் ஊற்றுக்கண் திருக்குறள். இது பக்தி, வினை, ஞானம் மற்றும் துறவு ஆகியவற்றின் நம்பமுடியாத சங்கமமாகும். திருக்குறள் ஒரு விலைமதிப்பற்ற நித்திய ஆன்மிக மற்றும் தார்மீக வழிகாட்டி மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு விலைமதிப்பற்ற பரிசு.
ஒவ்வொரு குறளும் உள்ளடக்கியுள்ள ஞானத்தைப் பொறுமையுடனும், தேசப் பெருமிதத்துடனும், உள்ளார்ந்த பணிவுடன் படிக்கவும், புரிந்துகொள்ளவும், உள்வாங்கிக் கொள்ளவும் நம் இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இதுவே வளமான கலாச்சாரம் மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை வலுப்படுத்திய வள்ளுவருக்கு நாம் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாகவும், எழுச்சி பெறும் புதிய இந்தியாவின் வேகத்தை வலுப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசுத்துறை முதன்மைச் செயலர்கள், ராஜ்பவன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT