Published : 14 Jan 2022 05:25 AM
Last Updated : 14 Jan 2022 05:25 AM
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளுக்கே உரித்தான பல்வேறு கலைநிகழ்வுகள் நடைபெறும். இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் நடைபெறும் சலங்கை எருது ஆட்டமும் ஒன்று. மார்கழி பிறந்துவிட்டாலே கோவை போத்தனூர் செட்டிபாளையம் மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவை வரவேற்கக் காத்திருப்பர். அந்த மாதத்தின் ஒவ்வொரு நாள் இரவும், ஊரின் நடுவில் உள்ள இடத்தில் கிராம இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுகூடி சலங்கை எருது ஆட்டப் பயிற்சியை மேற்கொள்வர்.
உருமி இசைக்கேற்ப ஆடுவோர், கால்களில் சலங்கை கட்டி, பழக்கப்பட்ட காளையின் முன்னே, கைகளில் நீளமான மூங்கில் கம்புகளை ஏற்ற, இறக்கங்களோடு அசைத்து ஆடுகின்றனர். தனக்கு முன்புஆடுபவரின் அசைவுகளுக்கு ஏற்ப, காளையும் அவர்களுடன் விளையாடுகிறது. இசையும், அதற்கேற்ற நடனமும், காளையின் அசைவுகளும் காண்போரை மகிழ்ச்சிப்படுத்தும். ஆட்டத்தின்போது ஆக்ரோஷமாக ஆடும் காளை, ஆட்ட நிறைவில், ஆடுவோர் மூங்கில் கம்புகளை தரையில் வைத்தவுடன் அந்த இடத்திலேயே அமைதியாகி நின்றுவிடும்.
சலகெருது கும்மி
காளையுடன் விளையாடிய பிறகு, குழுவாக சேர்ந்து ஆடும் சலகெருது கும்மிஆட்டம் தொடங்குகிறது. உருமி இசைக்கேற்ப காலில் கட்டியுள்ள சலங்கைகளை ஒலிக்கச்செய்து, தாள கதியுடன் சிறுவர்களும், பெரியவர்களும் இணைந்து ஆடும்போது விசில் சத்தம் பறக்க, அங்கே உற்சாகம் கரைபுரண்டு ஓடும். நள்ளிரவு வரை தொடரும் இந்த ஆட்டத்தை கொட்டும் பனியையும் மறந்து கிராம மக்கள் கண்டு ரசிக்கின்றனர்.
பயிற்சி முடிந்து தை முதல்நாளன்று உள்ளூருக்குள் சலங்கை எருது ஆட்டம் நடைபெறும். அதன்பின் காணும்பொங்கல் அன்று, வேலந்தாவளம் அருகே உள்ள வீரப்பனூரில் உள்ள ஆல்கொண்ட மால் கோயிலுக்கு காளையை வழிபாட்டுக்காக அழைத்துச் செல்கின்றனர். செல்லும் வழியில் உள்ள ஊர்களில் உள்ள பொதுவான இடத்தில் சலங்கை எருது ஆட்டத்தை நிகழ்த்துகின்றனர். அந்த ஊர்களில் உள்ள வீடுகளில் இந்தக் காளைக்கு சிறப்பு பூஜை செய்து, தீவனம், தானியங்கள் அளித்து மக்கள் வழிபடுகின்றனர்.
நேர்ந்துவிடப்படும் கன்று
போத்தனூர் செட்டிபாளையத்தில் சலங்கை எருது ஆட்டத்தை ஒருங்கிணைத்துவரும் அ.வெங்கடேஸ்வரன், சா.லோகநாதன் ஆகியோர் கூறியதாவது: பொங்கல் திருநாளன்று (தை 1) ஈனும் காளை கன்றுகளை ஆல்கொண்ட மால்கோயிலுக்கென (மாலகோயில்) நேர்ந்துவிட்டுவிடுவோம். உழவுக்கோ, பொருட்களை எடுத்துச்செல்ல மாட்டு வண்டிகளிலோ அந்த காளையைப் பயன்படுத்தமாட்டோம். அந்த காளைக்கு மூக்கணாங்கயிறுகூட இருக்காது. அடையாளத்துக்காக அந்த காளைக்கன்றின் காதுமடல்கள் சூலாயுதம் போல வெட்டி விடப்படும். சாமிக்கு நேர்ந்துவிடப்பட்ட காளை என்பதால், அந்தக் காளை எங்கு மேய்ந்தாலும், யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.
அந்தக் காளையை ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆட பழக்குவோம். பின்னர், காணும்பொங்கல் அன்று கால்நடைகளை காக்கும் கடவுளின் கோயிலான ஆல்கொண்ட மால் கோயிலுக்கு வழிபாட்டுக்காக அழைத்துச்செல்வோம். கோவையில் வேலந்தாவளம் அருகில் உள்ள வீரப்பனூர், கிணத்துக்கடவு அருகே கல்லாபுரம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அருகே பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி ஆகிய இடங்களில் ஆல்கொண்ட மால் கோயில்கள் உள்ளன.
கால்நடைகளுக்கு நோய்கள், ஆபத்தும் நேராமல் பாதுகாக்க வேண்டி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் மண்ணால் ஆன உருவங்களை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டால் கால்நடைகள் நலமுடன் இருக்கும் என்பது ஐதீகம். தை 2, 3 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். எனவே, உழவர் திருநாளன்று விவசாயிகளும், பொதுமக்களும் இங்கு வந்து கால்நடைகள் நலமுடன் இருக்கவும், அவை மென்மேலும் பெருகவும் மண்ணால்செய்யப்பட்ட கால்நடை உருவங்களுக்கு மாலை அணிவித்து, பூஜித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்துவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாரம்பரிய கலைகளுக்கு முக்கிய பங்கு
அடுத்த தலைமுறைக்கும் இந்தப் பாரம்பரியத்தை கடத்தி வருகின்றனர். சலங்கை எருது ஆட்டத்தில் கலந்துகொள்ளும் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக உள்ளனர். செல்போன்களின் வரவால் இணையத்தில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களின் கவனத்தை இசை, நடனத்தின் பக்கம் திருப்புவதில், இதுபோன்ற பாரம்பரிய கலைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. இளைஞர்களுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அவை விளங்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT