Published : 14 Jan 2022 06:05 AM
Last Updated : 14 Jan 2022 06:05 AM
தமிழகத்தில் இன்று முதல் ஜன.18 வரை வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், நேற்று பழநிக்கு பாதயாத்திரையாகவும், திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்துக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்கவும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்குத் தொடக்கத்திலேயே தடை விதித்ததால் பாதயாத்திரை பக்தர்கள் கோயில் திறக்கப்பட்டிருக்கும் நாட்களை கணக்கில்கொண்டு தங்கள் பாதயாத்திரையை திட்டமிட்டனர்.
இந்நிலையில் அடுத்த அறிவிப்பாக இன்று முதல் ஜன.18 வரை பக்தர்கள் வழிபடத் தடை என்ற அறிவிப்பால் தைப்பூச தேரோட்டத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நேற்றே பழநி வந்து சேர்ந்ததால் மலைக்கோயில், அடிவாரப் பகுதி மட்டுமின்றி பழநி நகரமே பக்தர்களின் தலைகளாகக் காணப்பட்டன.
பக்தர்களுக்கு தடை அறிவிப்பால் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் முழுமையான திட்டமிடல், கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இல்லாமல் போனது. இதனால் பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு நிலவியது. கோயில் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்குவதற்கு பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு மலைக்கோயிலில் உள்ள கடையை சூழ்ந்தனர். இதேநிலைதான் மலைக்கோயில் அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாமிர்த கடைகளிலும் காணப்பட்டது. பக்தர்கள் பலர் கூட்டத்தில் முண்டிஅடித்து பஞ்சாமிர்தத்தைப் பெறமுடியாமல் வெறுங்கையுடன் ஊர் திரும்பினர்.
தைப்பூசத் திருவிழா தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இன்றுமுதல் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடைவிதிப்பால், பழநி வரும் பக்தர்கள்மலைக்கோயில் அடிவாரத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
செந்திலாண்டவர் கோயிலில்
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஜன.18 வரை தைப்பூச விழா நடைபெற இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாகவே, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அத்துடன் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டமும் திருச்செந்தூரில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் ஜன.18 வரை வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த 3 நாட்களாக திருச்செந்தூரை நோக்கி பாதயாத்திரை பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்த பக்தர்கள் அனைவரும் கடந்த 3 தினங்களாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். கடலிலும், நாழிக்கிணறிலும் புனித நீராடுவதற்காக கடுமையான கூட்ட நெரிசல் நிலவுகிறது.
நேற்று ஒரே நாளில் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பாதயாத்திரை பக்தர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், பேருந்துகளிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருச்செந்தூர் நகர சாலைகளின் இரு ஓரங்களிலும் பாதயாத்திரை சென்ற பக்தர்களும், மற்ற வாகனங்களும் அணிவகுத்து வந்தன. நகரம் எங்கும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.
கோயில் அருகே உள்ள கடற்கரை பேருந்து நிலையம் அதிகாலையிலேயே நிரம்பியதால், வாகனங்கள் பழைய பேருந்துநிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. இருந்தபோதிலும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை ரதவீதிகளில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு நடந்தே சென்றனர். நகர் முழுவதும் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
போக்குவரத்து காவல்துறையினர், ஆங்காங்கே வாகனங்களை திருப்பிவிட்டு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இருப்பினும் நீண்ட அலகு குத்தி வந்த பக்தர்கள் சாலையை கடக்க முடியாமல், சாய்வாக திரும்பியபடியே கோயில் வரை சென்றனர். கடற்கரை, கோயில் பிரகாரங்கள், நாழிக்கிணறு உள்ளிட்ட இடங்களில் நெரிசல் காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment