Published : 14 Jan 2022 06:10 AM
Last Updated : 14 Jan 2022 06:10 AM
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில், 587 காளைகள் பங்கேற்றன.
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டைஒட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நிகழாண்டில் தமிழகத்தில் முதல் முதலாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டை, ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எம்எல்ஏகள் எம்.சின்னதுரை, வை.முத்துராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 587 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் 44 பேர் காயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 4 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களின் சான்றுடன் 700-க்கும்மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு, ஓட்டிவரப்பட்டிருந்தன. காலை சுமார் 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டில் பிற்பகல்2 மணியளவில் 587 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், நேரம் கடந்துவிட்டதால் ஜல்லிக்கட்டு முடிவுற்றதாக கோட்டாட்சியர் அபிநயா ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, வாடிவாசலும் மூடப்பட்டது. இதனால், காளைகள் உரிமையாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டிலேயே தங்களது காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர்கள் சுமார் 100 காளைகளை அவிழ்த்துவிட்டனர். இதனால், சீறிப் பாய்ந்த காளைகளைக் கண்டு பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். அசாதாரண சூழலை லேசான தடியடி நடத்தி போலீஸார் கட்டுப்படுத்தினர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் வேலுசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டனர்.
அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. இதில் 700 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஒட்டுமொத்தமாக சிறந்த வீரருக்கு கார், சிறந்த காளைக்கு பைக் பரிசாக வழங்கப்படும். மொத்தம் ரூ.1 கோடிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
ஜல்லிக்கட்டை பார்க்க அப்பகுதி மக்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. அப்பகுதியினர் ஜல்லிக்கட்டைக் காண வெளி ஆட்களை தங்கள் வீட்டு மாடியில் அனுமதிக்ககூடாது என போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். வெளியாட்கள் உள்ளே நுழைவதை தடுக்க, ஆங்காங்கே போலீஸார் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர். வெளியூர்களில் வசிப்போர் தொலைக்காட்சி மற்றும் இணையம் வழியாக போட்டியைக் காணுமாறு ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT