Published : 14 Jan 2022 07:18 AM
Last Updated : 14 Jan 2022 07:18 AM
நெல்லை மாவட்டத்தில் 1997-ல் அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு இதுவரை வழங்கப்படாத இழப்பீட்டு தொகையை ஜன. 20-க்குள் வழங்காவிட்டால் ஆட்சியர் அலுவலக அசையும் பொருட்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எல்.ஸ்ரீனிவாசன். இவருக்கு சொந்தமாக அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்த நிலம் அரசு நலத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடு வழங்க 1997-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்கப்படாததால் ஸ்ரீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் 2012-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 10.10.2018-ல் விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ஸ்ரீனிவாசனுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து இழப்பீடு வழங்கிவிட்டு, அது தொடர்பாக 11.1.2019-க்குள் அம்பாசமுத்திரம் சிறப்பு வட்டாட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார். அதன் பிறகும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஸ்ரீனிவாசனின் மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.ஆறுமுகம், வி.ஜார்ஜ்ராஜா ஆகியோர் ஆஜராகி, நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்றனர்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் உறுதியளித்து 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பிறகும் இழப்பீடு வழங்காதது துரதிர்ஷ்டவசமானது. மனுதாரருக்கு ரூ.6,13,489 இழப்பீடு மற்றும் வட்டி வழங்க வேண்டும். இப்பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய 20.1.2022 வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
அதற்குள் இழப்பீட்டுத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்யாவிட்டால் நெல்லை மாவட்ட ஆட்சியரின் அலுவலக கார் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும். இதற்காக அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்றத்துக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT