Published : 13 Jan 2022 06:48 PM
Last Updated : 13 Jan 2022 06:48 PM
சென்னை: "ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வுரிமைக்காக போராடிய மேனாள் நீதிபதி சந்துருவுக்கு அம்பேத்கர் விருது பொருத்தமானது" என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சீரிய தலைமையில் தமிழக அரசு உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள், சமூக நீதிக்காக பாடுபட்டு வரும் பெருமக்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் திருநாளில் வழங்கப்படுகிறது. 2021 ஆண்டுக்கான விருது பெறுவோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மேனாள் நீதிநாயகம் (ஓய்வு) கே. சந்துரு 'டாக்டர் அம்பேத்கர்' விருதுக்கும், திராவிட இயக்க ஆய்வாளரும், சிறந்த எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு 'தந்தை பெரியார்' விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
க.திருநாவுக்கரசின் படைப்புகளை அனைவரும் கற்றுணரவேண்டும்: அடுத்தடுத்து வரும் எல்லாத் தலைமுறைகளும் திராவிட இயக்கம் குறித்து அறிய முற்படும் போது ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவின் படைப்புகளையும், ஆவணத் தொகுப்புகளையும் கற்றுணர்வது இன்றியமையாத் தேவையாகும்.
காலங்காலமாக சமூக ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வாழ்ந்து வரும் பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் சமூகத்தின் வாழ்வுரிமைக்காக கல்லூரியில் பயிலும் காலத்தில் களப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் கே. சந்துரு, வழக்கறிஞர் பணியில் சட்டப் போராட்டமாக உயர்த்தி முன்னேறினார். அவரது நேர்மையும் , வெளிப்படை அணுகுமுறையும், சார்பற்ற நடுநிலையும் அவரை நீதி நாயகமாக உயர்த்தியது.
மாண்பமை நீதிமன்றத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்து சாதனை படைத்துள்ளார். இவர் வழங்கிய தீர்ப்புகளில் என்றென்றும் சுடர்விட்டு பிரகாசித்து வழிகாட்டும் தீர்ப்புகளும் அடங்கியுள்ளன. தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள் பொருத்தமான பெருமக்களிடம் சேர்ந்து, பெருமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
விருது பெறும் பெருமக்கள் க.திருநாவுக்கரசு மற்றும் நீதி நாயகம் (ஓய்வு) இருவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இதய பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT