Published : 13 Jan 2022 01:51 PM
Last Updated : 13 Jan 2022 01:51 PM

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை வழங்குக: பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் | கோப்புப் படங்கள்.

சென்னை: கேரளாவில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் நாளை (ஜன.14) பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் திருநாள் தனிப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நோக்கி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு மாவட்டங்களில் தை முதல் நாள் (ஜனவரி 14) அன்று வட்டார பொங்கல் விடுமுறை பெற்றுத் தர வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. கேரளத் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்டது. இதனை ஏற்று இன்று தமிழக முதல்வர் கேரள முதல்வருக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஜனவரி 14-ல் பொங்கல் விடுமுறை அறிவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x