Published : 13 Jan 2022 12:05 PM
Last Updated : 13 Jan 2022 12:05 PM

அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை செழிக்கட்டும்: ராமதாஸ், அன்புமணி பொங்கல் வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை : தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: "தமிழர்களின் உழவையும், உழைப்பையும் போற்றும் திருநாளான தைப் பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமை மிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால்தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தமிழ்நாடு இப்போதும் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமூக நீதி, கல்வி, வேளாண்மை, வேலைவாய்ப்பு தொடர்பான நமது கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. தமிழ்ச் சொந்தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்; அதற்காக நாம் சிந்திய வியர்வை ஒரு போதும் வீண் போகாது என்பதை தை பிறந்ததும் வரப்போகும் செய்திகள் அனைவருக்கும் உணர்த்தும்; நமது நம்பிக்கைகள் வெல்லும்.

தமிழர்களின் தனிச்சிறப்புகளில் ஒன்று அனைவரும் நலமாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என்று நினைப்பதும், வேண்டுவதும்தான். தைத் திங்கள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டின் வேண்டுதலும் அதுவாகத் தான் இருக்க முடியும். அதன்படியே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: "பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! நலிவுகள் மலிந்தாலும், பொலிவுகள் மீண்டும் பெருகும் என்ற நன்னம்பிக்கைப் பொங்கும் பொங்கலாக தமிழ்ப் புத்தாண்டு தைப் பொங்கல் மலரட்டும்! மலரட்டும்!! அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!"

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து செய்தி: "தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் உலககெங்கும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும். பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவுகூரவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப் படுபவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கல் திருநாளுக்கு தனிச்சிறப்புகள் உள்ளன. உலகில் விலங்குகளுக்கும், பொருட்களுக்கும் நன்றி தெரிவிக்கும் உயிரினம் தமிழினம் மட்டும் தான். உழவுக்கும் அதன் மூலம் உணவுக்கு உதவிய கால்நடைகள், ஏர் உள்ளிட்ட உழவுக்கான கருவிகளை வழிபடும் வரலாறு நமக்கு மட்டும் தான் உண்டு. அதேபோல், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கிணங்க தை மாதம் பிறந்தாலே தமிழர்க்கு தனி உற்சாகமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். அதேபோல், நமது உழைப்பும் நிச்சயம் வீண்போகாது.

தைப் பொங்கல் எப்போதும் நன்மைகளை மட்டுமே வழங்கும். அந்த வகையில் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும். பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, நமது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x