Published : 13 Jan 2022 10:12 AM
Last Updated : 13 Jan 2022 10:12 AM
சென்னை: "கடந்த 8 மாதங்களில் 1641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 1237 அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டு செயலுக்கு வந்துவிட்டன. அதாவது 75% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன். மீதம் உள்ள அறிவிப்புகள் சீக்கிரம் செயலுக்கு வரும். மீதமுள்ள அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். ஒன்று மட்டும் நிச்சயம். கொடுத்த வாக்குறுதியை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து செயல்படுத்தும் திட்டங்கள், நிறைவேற்றிய திட்டங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பேன் எனக் கூறியிருந்தேன்.
அதன்படி மே 7ஆம் நாள் முதல்வராகப் பொறுப்பேற்றேன். வாக்களிக்காதவர்களுக்கும் முதல்வரானேன். முதல்வராகப் பொறுப்பேற்றதுமே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.4000, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் உரிமை, உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சியில் பெற்ற மனுக்களை கவனிக்க தனித் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணை என ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
கோடிக்கணாக்கான மக்களின் தேவை, எதிர்பார்ப்பை நிறைவேற்றிய அரசுதான் இந்த திமுக அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக மக்களிடம் பெற்ற மனுக்களில் 2.5 லட்சம் மனுக்கள் மீது நூறு நாட்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்தியாவிற்கே முன்னோடி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம். இல்லம் தேடிக் கல்வி திட்டம் ஆகியனவற்றை செயல்படுத்தியுள்ளோம். 80138 இல்லம் தேடி கல்வி மையங்களை உருவாக்கினோம். இதனால் பல லட்சம் மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். 1 லட்சம் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கல்வி இடை நிற்றலில் இருந்து மீட்டு பள்ளிகளில் சேர்த்துள்ளோம். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்ற குடும்பங்களின் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எந்த மாநிலம், எந்த நாடு விபத்தில் சிக்கினால் முதல் 48 மணி நேர சிகிச்சை அரசே ஏற்கும்.
புத்தாண்டை வரவேற்போம்!
— M.K.Stalin (@mkstalin) January 1, 2022
கொரோனாவுக்கு விடைகொடுப்போம்! https://t.co/YeyxOpkfii
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிக் கொண்டிருக்கிறோம். அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகளை வெளியிட்டு அதில் 49 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, 110வது விதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 1641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 1237 அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது. அதாவது 75% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதம் உள்ள அறிவிப்புகள் சீக்கிரம் செயலுக்கு வரும். மீதமுள்ள அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். ஒன்று மட்டும் நிச்சயம். கொடுத்த வாக்குறுதியை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் நடைபெறுகிறோம். தேர்தல் அறிக்கையைப் புத்தகமாகக் கொடுத்துள்ளோம்.
எங்கள் செயல்பாடுகளுக்கான ஆதரங்கள் புத்தகங்களாக வெளியிட்டுள்ளோம். எதையும் வெறும் வாய் வார்த்தையாக சொல்ல மாட்டோம். கோப்புகள் தேங்கக்கூடாது என நான் அமைச்சராக இருந்தபோது தலைவர் கலைஞர் சொல்லுவார். அதை நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன். மே மாதம் முதல் 2683 கோப்புகளைப் பார்வையிட்டு 2619 கோப்புகளில் நடவடிக்கை எடுத்துள்ளேன். அமைச்சர்கள் அனைவரும் அவர்களிடம் வரும் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு கண்காணித்து வருகிறேன். மக்களுடன் கலந்து செயல்படும் முதல்வராக இருக்கிறேன். என்னை இப்படித்தான் கலைஞர் பழக்கியிருக்கிறார்.
மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில்; முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT