Last Updated : 19 Apr, 2016 06:27 PM

 

Published : 19 Apr 2016 06:27 PM
Last Updated : 19 Apr 2016 06:27 PM

தமிழக அரசியல் கலாச்சாரம் மாறும்: பாலபாரதி சிறப்புப் பேட்டி

'தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே என்ற அரசியல் கலாச்சாரம் மாறப்போகிறது. கூட்டணி அரசு மலரப்போகிறது' என்று திண்டுக்கல் எம்.எல்.ஏ பாலபாரதி கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. பாலபாரதி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியல் வெளியானதைவிட அதிகமாக பேசப்பட்டது பாலபாரதிக்கு சீட் வழங்கப்படாததே.

இந்நிலையில் 'தி இந்து' இணையதள பிரிவுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம்:

உங்களுக்கு சீட் வழங்கப்படாததற்கு ம.ந.கூ சார்பில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை நீங்கள் ஏற்காததே காரணம் என கூறப்படுகிறதே?

அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. தேமுதிக - ம.ந. கூட்டணி சாத்தியப்பட்டால் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பது 4 மாதங்களுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட முடிவு. ஒருவேளை விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அதை மாநிலக் குழு கூட்டத்திலேயே தெரிவித்திருப்பேன். ஏனெனில் நான் எப்போதுமே என் மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு தயங்கயதில்லை.

சில நாட்களுக்கு முன்னதாக என் ஃபேஸ்புக் பக்கத்தில் 'நல்லதோர் வீணை செய்து..' என்று ஒரு நிலைத்தகவல் பதிவு செய்திருந்தேன். அதை பலரும் பலவிதமாக விமர்சித்தனர். விமர்சனங்கள் குவிந்ததால் நானும் அதற்கு தகுந்த விளக்கமளித்தேன். சமூக வலைதளங்களில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு தீமையும் இருக்கிறது. சில நேரங்களில் நமது கருத்துகள் திரித்துக் கூறப்படுகின்றன. அப்படித்தான் எனக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு கற்பிக்கப்படும் இந்த காரணமும் அது தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.

இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால், தேமுதிக - மந-கூட்டணி உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னரே பிரேமலதாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், திமுகவை ஒரு பக்கம் பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டு மறுபக்கம் ஏன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். நீங்கள் ஏன் மக்கள் நலக் கூட்டணியில் இணையக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தேன். எனவே, விஜயகாந்தை நான் முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லை என்பது முற்றிலும் தவறானது.

தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என்ற கட்சியின் கொள்கை முடிவால் தான் எனக்கு சீட் வழங்கப்படவில்லை. நானும் இருந்து எடுத்த முடிவு தான் இது.

தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என்ற கட்சியின் கொள்கை முடிவால் உங்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்கிறீர்கள்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனிக்கத்தக்க செயற்பாட்டாளராக, கட்சியின் வாத விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் முன்னிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். அரசியல் கட்சிகள் சில நேரங்களில் சில சமரசங்களை செய்வது வழக்கமே. அப்படி இருக்கும்போது உங்களைப் போன்றோரை மீண்டும் வேட்பாளராக களம் இறக்குவதில் நிலவும் கெடுபிடியை ஏன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது?

தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இந்த பார்வையை நிச்சயம் முன்வைப்பேன்.

சமூக வலைதளங்களில் தாக்கத்தைப் பற்றி கூறுகிறீர்கள். மார்க்சிஸ்ட் கட்சி அண்மை காலமாக ஃபேஸ்புக்கில் இயங்கும் விதத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

சமூக வலைதளங்கள் எளிதாக மக்களுடன் நம்மை இணைக்கிறது. கட்சியின் முடிவுகளை கட்சி செயற்பாட்டாளராக நான் ஒரு கோணத்தில் பார்ப்பேன். ஆனால், அந்த முடிவை மக்கள் அதுவும் பலதரப்பட்ட மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குவதால் இளைஞர்கள் மத்தியில் கட்சியை இன்னும் கூடுதலாக முன்னெடுத்துச் செல்ல முடிந்திருக்கிறது என நம்புகிறேன்.

தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படியெனில் இந்த தேர்தலில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நத்தம் போன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனது கட்சி மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முழு வீச்சில் பிரச்சாரம் செய்வேன். வேட்பாளர் பட்டியல் வெளியானவுடனேயே பிரச்சாரம் குறித்த ஆலோசனை தொடங்கிவிட்டது.

தேமுதிக - மந. கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்து சொல்லுங்கள்?

தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே என்ற அரசியல் கலாச்சாரம் மாறப்போகிறது. கூட்டணி அரசு மலரப்போகிறது. இத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பல முனைப் போட்டி நிலவுகிறதே?

அரசியலுக்கு வந்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அதனால் சிறு சிறு கட்சிகள் உதயமாகின்றன. நாள்தோறும் செய்தித்தாளில் சிறிய புதிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை பார்க்க முடிகிறது. எல்லோருக்கும் தான் ராஜா ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. அரசியல் ஒரு வியாபாரமாகிவிட்ட சூழலில் இத்தகைய நிலைமை உருவாகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் அளித்திருக்கின்றனவா? உங்களுக்கு முழு திருப்தியா?

தமிழகத்தில் பெண் வேட்பாளர்கள் கணிசமாக குறைந்து வருகின்றனர். பழமைவாதமும், ஆணாதிக்கமும் அரசியல் கட்சிகளில் இருப்பதால் ஆண்டாண்டு காலமாகவே பெண் வேட்பாளர்கள் குறைவாகவே இருக்கின்றனர்.

பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இதைக் கட்சியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x