Published : 13 Jan 2022 11:48 AM
Last Updated : 13 Jan 2022 11:48 AM
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த நந்தன் (65) அதிமுக முன்னாள் நிர்வாகி ஆவார். கூட்டுறவு பண்டக சாலையில் கடந்த 4-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிச் சென்றார். இதை வீட்டில் பிரித்துப் பார்த்தபோது அதிலிருந்த புளி பாக்கெட்டில் பல்லி இருந்ததாக, செல்போனில் படம் எடுத்து கடந்த 7-ம் தேதி ரேஷன் கடை ஊழியர் சரவணனிடம் புகார் தந்தார். இத்தகவல் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியானது.
ரேஷன் கடை ஊழியர் சரவணன், வதந்தி பரப்பியதாக நந்தன் மீது திருத்தணி போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். நந்தன் மகன் குப்புசாமி(36),தன் தந்தை மீது பொய் வழக்குபோட்டுள்ளதாக புலம்பி வந்துள்ளார். அவர், நேற்று முன்தினம் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
நந்தன் மீதான வழக்கை ரத்து செய்யவும், குப்புசாமி மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யவும் கோரி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் எம்பி கோ.அரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திருத்தணியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT