Published : 13 Jan 2022 11:37 AM
Last Updated : 13 Jan 2022 11:37 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் ‘தங்க காசு’ பரிசு

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், தென் மண்டல ஐ.ஜி. அன்பு, மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர்.

மதுரை

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்த ஆண்டு பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக் காசு பரிசாக வழங்கப்படுகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன. 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக 17-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் அலங்காநல்லூரில் போட்டி ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், தென் மண்டல ஐ.ஜி அன்பு, எஸ்.பி பாஸ்கரன் மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், முதல் வெற்றி பெறும் காளைகள், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள், சிறந்த காளை, சிறந்த வீரர் ஆகியோருக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரிசுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கும் காளை உரிமையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தலாக ஒரு தங்கக் காசு மற்றும் வேட்டி வழங்கப்பட உள்ளதாக போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த காலங்களில் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு வாடிவாசலில் அவிழ்த்து விடுவதற்கு முன்பே 15 வகை பரிசுகள் வழங்கப்படும். தற்போது தங்ககாசும் சேர்த்து வழங்கப்படுவதால் காளை உரிமையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சிறந்த வீரர், காளைக்கு வழங்கும் பரிசு பொருட்கள் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கட்டுப்பாடுகளால் சுவாரஸ்யம் குறையாது; அமைச்சர்

அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு இந்த நோய்த்தொற்று காலத்திலும் தமிழர்களுடைய பாரம்பரியமும், கலாச்சாரமும் தடைபடாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை உரிய பாதுகாப்புடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தொற்று பரவாமல் இருக்க பார்வையாளர்கள் அனுமதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், போட்டி சுவாரஸ்யம் எந்த வகையிலும் குறையாத அளவுக்கு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. வெளியூர் பார்வையாளர்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டுகளிக்கலாம். தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x