Published : 13 Jan 2022 10:19 AM
Last Updated : 13 Jan 2022 10:19 AM
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேலூர் மார்க்கெட் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவதை தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகை யாக பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தற்போது கரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ளதால் பொங்கல் பண்டிகை கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, கோயில்களில் வழிபாடுகள் இல்லை என அரசு அறிவித்துள்ளது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் மார்க்கெட்டுக்கு லாரிகள் மூலம் டன் கணக்கில் கரும்புகள் கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக குவிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் சிதம்பரம், பண்ருட்டி, சேத்தியாதோப்பு, திருவண்ணாமலை, போளூர், கண்ணமங்கலம் போன்ற பகுதிகளிலிருந்து கரும்புகள் வேலூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டுமண்பானை, மஞ்சள், வண்ணக்கோல பொடிகள், பூக்கள், மாலைகள், கரும்பு ஆகியவைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்ற னர். பொங்கல் பண்டிகையால் வேலூர் மண்டி தெரு, லாங்கு பஜார், மெயின் பஜார், கிருபானந்த வாரியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது.
கரும்பு, மஞ்சளை போலவே, பொங்கல் பண்டிகைக்காக சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், வாழைக்காய், கருணை கிழங்கு, உருளைகிழங்கு போன்றகாய்கறிகளும் அதிகமாக விற்பனைக்காக வந்துள்ளன.
வேலூர் மார்க்கெட்டுக்கு மக்கள்அதிக அளவில் வந்து செல்வதால் குற்ற நடவடிக்கைகள் தடுக்க காவல் துறையினர் சீருடை அணியாமல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 800-க்கும் மேற்பட்டகாவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளதாக மாவட்ட காவல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பொது மக்கள் அதிக அளவில் கூட அனுமதியில்லை என்றாலும், பொங்கல் பண்டிகைக்காக சில இடங்களில் அளவுக்கு அதிகமாக கூட்டத்தை காண முடிகிறது. குறிப்பாக, ஜவுளி கடைகள், ஷோரூம்களில் புதிய ஆடைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவி வருவதால் வியாபாரிகள், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment