Last Updated : 12 Jan, 2022 06:09 PM

1  

Published : 12 Jan 2022 06:09 PM
Last Updated : 12 Jan 2022 06:09 PM

முதல்வரை டம்மியாக்கி விட்டார்கள்; புதுச்சேரியில் நடப்பது மக்களின் அரசா? - நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி: "புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கிறதா? இல்லை, குடியரசு தலைவர் ஆட்சி நடக்கிறதா?" என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் முன் இளைஞர் காங்கிரஸார் கருப்பு அங்கி அணிந்து நடுரோட்டில் அமர்ந்து பஜ்ஜி விற்றும், ஷூ பாலிஷ் தேய்த்தும் இன்று (ஜன.12) நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணபாரதி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் லட்சுமிகாந்தன் மற்றும் பெண்கள், பட்டதாரி இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் படித்த பட்டதாரிகளுக்கு கடந்த 6 மாதமாக என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு இதுவரை வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவோம் என தேர்தல் நேரத்தில் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். பிரதமர், உள்துறை அமைச்சரும் புதுச்சேரியில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என கூறினர். ஆனால் இதுவரை பணியிடங்களை நிரப்பவில்லை. பணியிடங்களை நிரப்ப எங்களிடம் நிதியில்லை என பாஜக அமைச்சர்கள் இப்போது கூறுகின்றனர். மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் பணியிடங்களை நிரப்பு முடியும் என முதல்வர் கூறுகிறார். இப்படி கூறுபவர்கள் ஏன்? தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தார்கள்.

புதுச்சேரியில் 24 சதவீதம் படித்த பட்டதார்கள் வேலையின்றி உள்ளனர். மத்திய மோடி அரசு 2014-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை கொடுப்போம் என கூறியது. இப்போது 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. 14 கோடி பேருக்கு வேலை அளித்திருக்க வேண்டும். ஆனால் கரோனா வந்தபிறகு 24 கோடி பேர் வேலையின்றி நாட்டில் உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மருத்துவர்கள், செவியியர்கள், ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறை, கூட்டுறவு துறையில் ஆட்களை நியமித்தோம். பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், தொழில் முளைவோர் ஆராய்ச்சி மையம் நாங்கள் கட்டி முடித்தது. இவர்கள் ஒன்றும் புதிதாக கட்டவில்லை.

புதுச்சேரியை பொறுத்தவரை வாக்குறுதி அரசாகத்தான் இருக்கிறது. மக்கள் திட்டங்களை நிறைவேற்றும் அரசாக இல்லை. அரிசிக்காக ஒதுக்குற பணத்தை தான் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் கொடுத்தார். புதிதாக நிவாரணம், நிதி மத்திய அரசு தரவில்லை. மாநில அந்தஸ்து வழங்கவில்லை. கடனை தள்ளுபடி செய்யவில்லை. அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர். கரோனா காலத்தில் பேரிடம் மீட்பு துறை தலைவர் முதல்வர் ரங்காாமி, அவர் அந்த கூட்டத்தை நடத்தவில்லை. ஆளுநர் தான் நடத்துகிறார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கிறதா? இல்லை, குடியரசு தலைவர் ஆட்சி நடக்கிறதா?.

கரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. ஆனால் அதற்கான கட்டமைப்பு இன்னமும் செய்யவில்லை. மருத்துவமனைகளில் அதற்காக இடம் ஏற்படுத்தவில்லை. எல்லாவற்றிலும் நிர்வாகம் ஸ்தம்பித்து போயுள்ளது. பொது இடத்தில் பெரிய விழாக்கள் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.

தெலங்கானாவுக்குத்தான் முழுநேர ஆளுநர், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர். ஆனால் ஆளுநர் புதுச்சேரியிலேயே எப்போதும் உட்காந்திருக்கிறார். ஏனென்றால் அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். முதல்வரை டம்மியாக்கி விட்டார்கள்.

ஆளுநரை எதிர்த்து எதற்காக நாங்கள் போராடினாமோ, அதனை ரங்க சாமி வீணடித்துவிட்டார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கவில்லை, ஆளுநரின் அரசு தான் நடக்கிறது. இது வெட்கக்கேடான விஷயம். பாஜகவினர் சடுகுடு விளையாடுகிறார்கள். சடுகுடு விளையாடும் நேரமா இது" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x