Published : 12 Jan 2022 04:16 PM
Last Updated : 12 Jan 2022 04:16 PM
சென்னை: தமிழகத்தில் 3 அமைச்சர்கள் வசம் இருந்த சில துறைகளை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், இயற்கை வளத்துறை என்ற புதிய துறையை உருவாக்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தொழில்துறை அமைச்சரிடமிருந்த சர்க்கரை ஆலைகள் துறையானது உழவர் நலத்துறை அமைச்சகத்துக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சரிடமிருந்த விமானப் போக்குவரத்து துறையானது தொழில்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகமானது தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், தமிழகத்தில் இயற்கை வளத்துறை என்ற புதிய துறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையை நீர் வளத்துறை அமைச்சரான துரை முருகன் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநகரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகிய 3 துறைகள் இந்த புதிய இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இந்தத் துறைக்கு தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனித வளத்துறை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT