Published : 22 Apr 2016 08:09 PM
Last Updated : 22 Apr 2016 08:09 PM
இயற்கை பேரிடருக்கு அடிக்கடி இலக்காகி வரும் கடலூர் மாவட்டத்தில் 4 மாதங்களுக்கு முன் பெய்த கனமழை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கால் சுமார் 91 பேர் உயிரிழக்க நேர்ந்தது. 50 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாழாகியது. சாலைகள், மின்கம்பங்கள் சேதமடைந்து, சாலை போக்குவரத்தும், மின்தடையும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட சில தினங்களிலேயே தமிழக அரசு 10 பேர் கொண்டு அமைச்சர்கள் குழுவை கடலூருக்கு அனுப்பிவைத்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டது. அவர்களும் வந்து சுற்றப்பயணம் மேற்கொண்டு, மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் கூறி திரும்பிச் சென்றனர்.
வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், பாதியளவு வீடு சேதமடைந்தவர்களுக்கு ரூ.3100 வழங்கப்படும் என அரசு அறிவித்தது.அறிவிப்பு வெளிவந்ததே தவிர பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளான விசூர் கிராம மக்கள். வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மெத்தைவீடு, ஓட்டு வீடு,குடிசை வீடு என எல்லோருக்கும் வழங்கப்படும் என கூறி அனைவரிடமும் அதற்கான ஆவணங்கள் பெறப்பட்டதே தவிர, அனைவருக்கும் வழங்கப்படவில்லை எனவும், அதிமுககாரங்களா பார்த்துத் தான் அந்த காசையும் கொடுத்தாங்க என்கின்றனர் பெரியகாட்டுப்பாளையம் கிராம வாசிகள்
இந்த நிலையில் விசூர் கிராமத்தில் பாதிப்புக்குள்ளான மக்களை சந்தித்து தற்போதைய நிலை குறித்து விசாரித்தோம். 'என்னத்த கொடுத்தாங்க, வெள்ளம் வந்து போனதுக்கப்புறம் ரெண்டு நாளு கழிச்சி வந்தாங்க, அரிசி, பொடவ, போர்வ, வேட்டி துண்டு கொடுத்தாங்க, அதோடு சரி. அதுக்கப்புறம் தொண்டு நிறுவனங்க காரங்க வந்து கொடுத்தாங்க, அதையும் ஊர் தலைவரு புடுங்கிக்கிட்டு, நா கொடுத்துக்குறேன், அப்புடியே எல்லாத்தையும் வாங்கிட்டு போய்ட்டாரு.
அரசாங்க கொடுத்த 5 ஆயிரத்து வைச்சுக்கிட்டு, இப்ப இருக்குற நிலைமையில் வூடு கட்டமுடியுமான்னு நீங்களே சொல்லுங்க' என்றார் மணிலா அறுவடையில் ஈடுபட்டிருந்த ப்ரியதர்ஷினி.
(வெள்ளத்தால் வீட்டையும், நிலத்தையும் இழந்து நிற்கும் பழனியம்மாள்)
அப்போது குறுக்கிட்ட பழனியம்மாள், 'எந்த ஊர் தலைவரு வந்து ஓட்டு கேக்கறாருன்னு பாக்கறோம். இந்த வாட்டி நாங்க யாருக்கும் ஓட்டுப் போடறதா இல்லீங்க. அப்படியே போட்டாலும் மாத்தித் தான் போடுவோம். இந்த வெய்யில்ல புள்ள குட்டிய வெச்சுக்கிட்டு நாங்க பட்ற கஷ்டத்த யாருக்கிட்ட சொல்றதுன்னு தெரியல.
அந்த அம்மா என்னங்க பண்ணுவாங்க, எல்லாம் குறுக்க இருக்கிற கட்சிக் காரங்க பண்றதால தான் அந்த அம்மாவுக்கு கெட்ட பேர் வந்துருச்சி. கட்சிக்காரங்க அவங்க சொந்தக் காரங்களா பாத்து தான் எல்லாம் செஞ்சாங்க. அந்த அம்மாவ குறை சொல்றதுல எந்த பிரயோஜனமும் இல்லீங்க' என்று ஆறுதல் கூறுகிறார் குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதம்.
கடலூர் மாவட்ட கிராமப்புற பெண்களின் மனதில் ஒரு வடுவாகவே மாறிவிட்டது வெள்ள பாதிப்பு. அதன் பாதிப்பு இந்தத் தேர்தலில் கண்டிப்பாக பிரதிபலிக்கும் சூழல் காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT