Published : 12 Jan 2022 08:39 AM
Last Updated : 12 Jan 2022 08:39 AM
கோவை வனச்சரகத்துக்குட்பட்ட மருதமலை செல்லும் பாதையில் கிடந்த யானையின் சாணத்தில் முகக்கவசம், காலியான பால் பாக்கெட், சாம்பார் பொடி பாக்கெட், பிஸ்கட் கவர், சானிடரி நாப்கின், பெண்கள் தலைமுடியை கட்டும் பேண்ட் உள்ளிட்டவை இருந்தது வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக வன கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: நன்குவளர்ந்த ஒரு யானைக்கு, தினமும் சராசரியாக 150 முதல் 200 கிலோஉணவு தேவை. அதில் 80 சதவீதம்தாவர வகை, 20 சதவீதம் மரவகைஉணவை யானைகள் உட்கொள்கின்றன. ஒரு சில யானைகளை ‘ஜங்க் புட்’ யானை என்றே அழைக்கிறோம். வனத்துக்கு வெளியே கிடைக்கும் உணவை அவை சாப்பிட தொடங்கிவிட்டால், வனத்துக்குள் கிடைக்கும் உணவை சாப்பிட அவற்றுக்கு விருப்பம் இருக்காது. வகை,வகையான உணவுகளையே அவை தேடும். இலங்கையில் இதுபோன்ற யானைகளை காண முடியும். சில யானைகள் அரிசியை குறிவைத்து சாப்பிடும். 10 கிலோ அரிசியை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தாலும் அதை தேடிக் கண்டுபிடித்து சாப்பிட்டுவிடும். ஏனெனில், யானைகள் அபார மோப்பசக்தி உடையவை.
யானைகள் வேண்டுமென்றே பிளாஸ்டிக்கை உட்கொள்ளாது. உணவோடு சேர்ந்து தெரியாமல் அவை உள்ளே சென்றுவிடுகின்றன. சானிடரி நாப்கின் போன்றவற்றில் உப்பு படிந்திருப்பதால் அவற்றை யானை உட்கொண்டிருக்கலாம். கேக், மாவு பொருட்கள், பைனாப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களின் கழிவுகள், வெல்லம் போன்றஇனிப்புகள் ஆகியவை யானைகளை ஈர்க்கும்.
உயிரிழக்கும் மான்கள்
யானைகள் வயிற்றில் உணவை ஜீரணிக்க ஒரே ஒரு அறைதான் இருக்கும். எனவே, குறைவான அளவு பிளாஸ்டிக் வயிற்றிலேயே தங்க வழியில்லை. அவற்றின் குடல் பெரிது என்பதால் சாணத்தோடு சேர்ந்து வெளியே வந்துவிடும். இருப்பினும், யானைகள் தொடர்ச்சியாக உணவோடு சேர்த்து தெரியாமல் அதிக அளவிலான பிளாஸ்டிக் உட்கொள்ளும்போது, அவை வெளியேற வழியில்லாமல் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால், கடமான், மான், காட்டு மாடு (பைசன்), ஆடு, மாடு போன்றவற்றின் வயிற்றில் உணவை ஜீரணிக்க நான்கு அறைகள் இருக்கும். அவற்றின் குடல் சிறியதாக இருக்கும். எனவே, அவை பிளாஸ்டிக்கை சாப்பிடும்போது குடலில் அடைப்பை ஏற்படுத்தும். பின்னர், மூச்சுவிடமுடியாமல் வயிறு வீக்கம் ஏற்பட்டு அவை உயிரிழந்துவிடும். உடற்கூராய்வு செய்யும்போதுதான் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதே தெரியவரும்.
வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை தடுக்கஅரசு துறைகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்களை அப்படியே தூக்கி எறிவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருதமலை வனப்பகுதியை ஒட்டியே சோமையம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமாக 7 ஏக்கர்இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக குப்பை கொட்டி வருகின்றனர். யானைகள் உலவும் பகுதிக்கு அருகிலேயே இந்த இடம் இருப்பதால்,அவற்றை ஈர்க்கும் உணவுப்பொருட் கள் அங்கு இருக்கும்போது அதை உட்கொள்ள வாய்ப்பாகிறது.
இதுதொடர்பாக வனத்துறை யினர் கூறும்போது, “குப்பை கொட்டும் இடத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றைதரம்பிரிக்காமல் திறந்தவெளியில் மொத்தமாக கொட்டிச் செல்கின்றனர். குப்பைகிடங்கை சுற்றிலும்வேலி எதுவும் இல்லை. அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வேறு இடத்துக்குகுப்பை கிடங்கை மாற்றுமாறு ஊராட்சிக்கு கடிதம் அனுப்பியுள் ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. மலைப் பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறு மருதமலை கோயில் நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளோம்” என்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, “சோமையம்பாளையத்தில் மக்கும், மக்காத குப்பையை தரம்பிரித்து சேகரிக்கவும், குப்பை கொட்டும் அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT