Published : 12 Jan 2022 07:23 AM
Last Updated : 12 Jan 2022 07:23 AM
காஞ்சிபுரம்: திருக்காலிமேட்டில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் பயோமைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் 60 ஆயிரம் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு வருகிறது.
நகரில் நாள் ஒன்றுக்கு 65 டன் குப்பை சேகரமாகிறது. இதில்,15 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளன. திடக்கழிவு மேலாண்மைதிட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிப்புக்காக குப்பை கிடங்கு வளாகத்தில் பிரம்மாண்ட கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலை. தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியோடு ரூ.7 கோடிமதிப்பில் பயோமைனிங் தொழில்நுட்பத்தில், நத்தப்பேட்டை ஏரிக்கரையில் தேங்கியுள்ள குப்பையைஅகற்றி பூங்காவாக மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, தனியார் ஒப்பந்ததாரர் மூலம்இந்த திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குப்பைகிடங்கில் தேங்கியிருந்த ஒரு லட்சம் டன் குப்பையில், பயோமைனிங் தொழில்நுட்பம் மூலம் 60 ஆயிரம் டன் குப்பை வெளியேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகிகள் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குப்பை கிடங்கை நேரில் பார்வையிட்டு, பயோமைனிங் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதன்படி, குப்பை கிடங்கில் தேங்கியிருந்த ஒரு லட்சம் டன் குப்பையில் 60 ஆயிரம் டன் குப்பை பயோமைனிங் தொழில்நுட்பத்தில் பிரிக்கப்பட்டு பாலித்தீன் பைகள், சாக்குகள், தேங்காய் சிரட்டை, ரப்பர், காலணிகள், டயர், இரும்பு என தனித்தனியாக பிரித்து அகற்றப்பட்டு வருகின்றன. குப்பையில் இருந்து பிரிக்கப்பட்ட மண், உரமாகப் பயன்படுகிறது.
காலணிகள் மறுசுழற்சிக்காக, சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கும், பாலித்தீன் பைகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைக்கும் அனுப்பப்படுகின்றன. பெரிய அளவில் கிடைக்கும் கற்களை சேகரித்து மாநகர் பகுதியில் உள்ள சாலை பள்ளங்களில் கொட்டி அவற்றை சீரமைத்து வருகிறோம். பயோமைனிங் தொழில்நுட்பம் மூலம் விரைவில் குப்பை கிடங்கு புதுப்பொலிவு பெறும் என்பதால், பூங்காவாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
குப்பை பயோமைனிங் தொழில்நுட்பத்தில் பிரிக்கப்பட்டு பாலித்தீன் பைகள், சாக்குகள், தேங்காய் சிரட்டை, ரப்பர், காலணிகள், டயர், இரும்பு என தனித்தனியாக பிரித்து அகற்றப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT