Published : 08 Apr 2016 08:09 AM
Last Updated : 08 Apr 2016 08:09 AM
உயர் நீதிமன்றத்தில் பணியிலுள்ள நீதிபதி ஒருவர், சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தான் பணிபுரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அரசு தரப்பில் உறுதி யளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு ஒரே நாளில் முடிக்கப் பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாம் நிலை நீதிபதியாக இருப்பவர் ஏ.செல்வம். இவரது வீடு புதுக்கோட்டை கற்பக நகரில் உள்ளது. கற்பக நகருக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளது. இந்தச் சாலையில் தற்போது நகராட்சி சார்பில் புதிய சாலை அமைக்கப்படுகிறது.
அவசரகதியில் பணிகள்
இந்நிலையில் ஆக்கிரமிப்பு களை அகற்றாமல் சாலை அமைப் பதை நிறுத்த உத்தரவிடக் கோரி நீதிபதி ஏ.செல்வம், தான் பணிபுரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், கழிவுநீர் கால்வாய் கட்டாமலும் சாலை அமைத்தால் மக்களின் வரிப்பணம் வீணாகும். தேர்தலை மனதில் வைத்து அவசரகதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பியும் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே ஆக்கிரமிப்பு களை அகற்றவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், அதன் பின்னர் சாலை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்” என நீதிபதி கூறியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகியோர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் வாதிடும் போது, ‘கற்பக நகரில் ஆக்கிரமிப்பு களை நில அளவைத் துறை அதிகாரிகள் அளவீடு செய்துள் ளனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. தேர்தல் முடிந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை அமைக்கப்படும்’ என தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் பெற்றது நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT