Published : 12 Jan 2022 11:08 AM
Last Updated : 12 Jan 2022 11:08 AM
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஜன.16-ம் தேதி நடக்கவிருந்த புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு முழு ஊரடங்கால் ஜன.17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
இந்நிலையில், ஜனவரி 16-ம் தேதி முழு ஊரடங்கால் மஞ்சுவிரட்டை ஜன.17-ம் தேதிக்கு மாற்றி சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். இதற்கிடையில் பாரம்பரிய முறைப்படி சிராவயலில் மஞ்சு விரட்டு திடல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடத்தை தயார் செய்கின்றனர்.
மஞ்சுவிரட்டு அன்று பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். தொடர்ந்து வாண வேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் செல்வர். தொழுவில் உள்ள மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்வர். தொடர்ந்து கோயில் காளைகளை அவிழ்த்து விட்டதும், மற்ற காளைகள் அவிழ்த்து விடப்படும். சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண் டுள்ளன.
இதுகுறித்து ஆட்சியர் பி.மது சூதன்ரெட்டி கூறியதாவது: மஞ்சு விரட்டு நடத்துவோரிடம் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்த வலியுத்தி உள்ளோம். ஜன.17-ல் சிராவயலிலும், ஜன.18-ல் கண்டுப்பட்டியிலும் மஞ்சுவிரட்டு நடக்கும். 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வீரர்கள் 2 தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் கரோனா இல்லாத சான்று பெற்றிருக்க வேண்டும். மாடுகளை கொண்டு வர 2 பேர் அனுமதிக்கப்படுவர் என்றார். மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உடன் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT