Published : 11 Jan 2022 10:29 PM
Last Updated : 11 Jan 2022 10:29 PM
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து ஆட்குறைப்பு என்ற பெயரில் உள்ளூர் ஆட்களை வெளியேற்றி வெளிமாநில ஆட்களை நியமிக்க சுங்கச்சாவடி நிர்வாகங்கள் திட்டமிட்ட சதியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு சுங்கச்சுவாடி பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் கார்ல் மார்க்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டுப்பாட்டில் 15சுங்கச்சாவடிகளும், 33 சுங்கச் சாவடிகள் தனியார் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் எனும் தானியங்கி முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால், சுங்கச்சாவடிகள் மனித ஆற்றைலை குறைக்கிறோம் என்ற பெயரில் உள்ளூர் மனித ஆற்றலை குறைத்து, வெளிமாநிலத்திலிருந்து ஆட்களை நுழைக்க சுங்கச்சாவடி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுங்கச்சுவாடி பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் கார்ல்மார்க்ஸ் கூறுகையில், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 40 சதவிகிதம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது சட்டவிரோத செயல். இதன் உள் நோக்கம் தொடர்ச்சியாக பணியாளர் வேலை செய்தால், பணி நிரந்தரம் கோருவார்கள் என்ற எண்ணத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனுடன், திருப்பூர் மக்களவை உறுப்பினரும், ஏஐடியுசி மாநிலத் தலைவருமான கே.சுப்ராயன் மற்றும் நானும் முறையிட்டோம்.
அவர் உடனடியாக 7 மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் சட்ட விதிகளின் படி அவர்களின் பணிக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் உடனடியாக பேசி தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT