Published : 11 Jan 2022 07:05 PM
Last Updated : 11 Jan 2022 07:05 PM
சென்னை: பிரபல ரவுடி படப்பை குணா, காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்படலாம் எனக் கூறி அவரது மனைவி எல்லம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி எல்லாம்மாள் தாக்கல் செய்துள்ள மனுவில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சுயேட்சையாக எனது கணவர் வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் மிரட்டல்கள் வருகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளில் தனது கணவர் சரணடைய தயாராக உள்ள நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அச்சப்படும் வகையில் என்கவுன்டர் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடைந்தால் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் அனுமானம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தொடரபட்ட வழக்கு எனக் கூறி, எல்லாமாளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT