Published : 11 Jan 2022 01:53 PM
Last Updated : 11 Jan 2022 01:53 PM
மதுரை: ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கமான தை மூன்றாம் நாள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைக்காக விழாக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மாநில அரசு, கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கு வரக்கூடிய நபர்கள் அனைவரும் 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும், மேலும் கரோனா இல்லை என்பதற்கான உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
வழக்கமாக ஒவ்வொரு பொங்கல் திருநாளிலும், பாரம்பரிய முறைப்படி தை முதலாம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மதுரையில் கோலாகலமாகத் தொடங்கப்படும். அதன்படி ஜனவரி 14-ல் அவனியாபுரத்திலும், 15-ல் பாலமேட்டிலும், 16-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி தை மூன்றாம் தேதி அதாவது ஜனவரி 16-ல் அலங்காநல்லூரில் வழக்கமாக நடக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. பாரம்பரிய நிகழ்ச்சி என்பதால் அதேநாளில் நடத்த சிறப்பு அனுமதி பெறப்படுமா அல்லது மற்றொரு நாளுக்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் வரும் ஞாயிறு அன்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அடுத்து வரும் வேறு தினங்களில் ஒருநாளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அதாவது 17,18 தேதிகளில் மாற்றப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் விழாக் குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட ஆட்சியரின் அழைப்பினை ஏற்று விழாக் குழுவினர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் குழுவினரும் பேசி முடிவெடுத்த பிறகு இதற்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT