Published : 11 Jan 2022 12:41 PM
Last Updated : 11 Jan 2022 12:41 PM
சென்னை: ஜனவரி 16 அன்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் அத்தினத்தில் செய்யப்பட்டுள்ள முன்பதிவு பேருந்துக் கட்டணங்கள் திருப்பித் தரப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இன்று முதல் 16 ஆயிரத்திற்கும அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுபோல் பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதற்காக 16, 17,18 ஆகிய தினங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது. வரும் 16ஆம் தேதி முழு ஊரடங்கு அறிக்கப்பட்டுள்ளது என்பதால் ஜனவரி 16-ல் அரசுப் பேருந்துகள் வெளிமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவது இயங்காது எனவும் அதற்கான முன்பதிவுக் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
''ஜனவரி 16 அன்று மட்டும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக வழக்கமான பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 4,130 பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் சுமார் 20 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, மதுரை மண்டலம், கோவை மண்டலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் அதிக அளவு முன்பதிவு செய்திருந்தனர்.
தற்போது அவர்களுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், வரும் 16ஆம் தேதி முழு ஊரடங்கு நாளன்று அரசுப் பேருந்துகள் இயங்காது என்பதால் அன்றைய தினம் முன்பதிவு செய்தவர்களுக்குக் கட்டணம் திருப்பித் தரப்படும்.
இதனால் 16ஆம் தேதி பயணிப்பதற்காக முன்பதிவு செய்த பயணிகளின் கட்டணத்தை இரண்டு நாளில் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அல்லது ஜனவரி 16ஆம் தேதிக்குப் பதில் வேறொரு நாளில் பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளலாம்''.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT