Published : 11 Jan 2022 12:08 PM
Last Updated : 11 Jan 2022 12:08 PM
சென்னை: "கரோனா மூன்றாவது அலையில் ஆக்சிஜன் தேவை குறைந்திருக்கிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மா.சுப்பிரமணியம் கூறும்போது, “கரோனா மூன்றாவது அலையை பொறுத்தவரை ஆக்சிஜன் தேவை குறைவாகவே இருக்கிறது. கரோனா தொற்றால் லேசான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை தினசரி கரோனா பாதிப்பு 6,000 வரை தொடர்கிறது. தொடர்ந்து தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் மூன்றாவது அலையை பொறுத்தவரை இதுவரை 26,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 22,000 பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் கரோனா தொற்று திரளாக ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க மருத்துவ குழுக்கள் செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் நேற்று 13,990 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 28,14,276. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,94,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,14,643.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT