Last Updated : 10 Jan, 2022 05:17 PM

 

Published : 10 Jan 2022 05:17 PM
Last Updated : 10 Jan 2022 05:17 PM

கோவையில் கரோனா பாதித்தோரில் 88% பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: ஆட்சியர் தகவல்

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு நேற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். உடன், மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

மருத்துவதுறை பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கோவை அரசு மருத்துமனையில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (ஜன.10) தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

"அதிக அளவில் தடுப்பூசி செலுத்தியதில் கோவை மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்குகிறது. மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களில், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் போக எஞ்சியுள்ளவர்களுக்கு இன்னும் மூன்று நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும். கோவையில் 85,554 மருத்துவத் துறை பணியாளர்கள், 91,762 முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 72,112 பேர் என மொத்தம் 2,49,428 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர். இதில், கடந்த மே 31 வரை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக மொத்தம் 70,955 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 9,800 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கோவிட் கேர் மையங்களில் 4,300-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5300-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், 129 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்கலன், 31 ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் சதவீதம் உயர்ந்து வந்தாலும் மருத்துவமனையில் அனுமதிப்படுவோர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் மூலம் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 4 பேருக்கு மட்டுமே இதுவரை ஒமைக்ரான் தொற்று கண்டறியபட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குறைவான தொற்று பாதிப்பு உள்ளவர்களை வீட்டிலே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்களை மட்டுமே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை வழங்கவும், அவர்களை கண்காணிக்கவும் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மருத்துமனையின் டீன் டாக்டர் நிர்மலா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா, மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x