Published : 10 Jan 2022 02:10 PM
Last Updated : 10 Jan 2022 02:10 PM

பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து: காணொலி மூலம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வரும் 12-ம் தேதி தமிழகம் வரவிருந்த பிரதமர் மோடியின் வருகை ரத்தாகியுள்ளது.

வரும் ஜனவரி 12-ம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரவிருந்தார். விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது.

அரசு நிகழ்ச்சிகளைத் தாண்டி அன்றைய தினத்தில் தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா உள்ளிட்டவற்றிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால், அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக பாஜக நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள மாட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே தெரிவித்துள்ளார். தற்போது, பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிரதமர் மோடி, தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார். சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் சுமார் 2145 கோடி ரூபாய் மத்திய அரசாலும் மீதி தமிழக அரசாலும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் முயற்சியாக இவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதேபோல், இந்திய பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் மற்றும் செம்மொழிகளை மேம்படுத்தவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (CICT) புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது. புதிய வளாகம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த CICT, இனி புதிய 3 மாடி வளாகத்தில் செயல்படும். புதிய வளாகத்தில் விசாலமான நூலகம், மின் நூலகம், கருத்தரங்கு அரங்குகள் மற்றும் மல்டிமீடியா அரங்கம் ஆகியவை உள்ளன.

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான CICT ஆனது தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தனித்துவத்தை நிலைநிறுத்த ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு செம்மொழித் தமிழை மேம்படுத்துவதில் பங்காற்றி வருகிறது. உலகெங்கிலும் செம்மொழியான தமிழை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புதிய வளாகம் திறமையான பணிச்சூழலை வழங்கவுள்ளது.

இதனிடையே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும், தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும் வரும் ஜனவரி 12-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து என்பது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x